போர் தொடங்கிய பிறகு, பிரிட்டன் முழு சியோனிச இயக்கத்தையும் மாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கியது. ஒட்டோமான் பேரரசின் புதிய புவிசார் அரசியல் சூழ்நிலை மாற்றங்கள் சியோனிச நோக்கத்தை மேம்படுத்துவதற்கான நல்லதோர் வாய்ப்பென்பதனை உணர்ந்துகொண்ட வெய்ஸ்மேன், பிரிட்டனில், செல்வாக்குமிக்க ரோத்ஸ்சைல்ட் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களின் உதவியை வேண்டினார்.
நவம்பர் 1914 இல் ஒரு கூட்டத்தில், சீமான் எட்மண்ட் டி ரோத்ஸ்சைல்டின் மகன், ஜேம்ஸ் டி ரோத்ஸ்சைல்ட், சியோனிஸ்டுகள் பாலஸ்தீனத்தை குடியேற்றங்கள் மூலம் மட்டும் காலனித்துவப்படுத்தாமல், பாலஸ்தீனத்தில் யூத அரசை உருவாக்க வேண்டும் என்று கோர வேண்டும் என்று வெய்ஸ்மானிடம் கூறினார். ‘திடமான ஒரு யூத சமூகம் பாலஸ்தீனத்தில் உருவாகுவது மிகமுக்கியமான அரசியற் சொத்தாக லண்டன் கருதும் என்று அவர் வாதிட்டார். அதே மாதத்தில், ஒட்டோமான் பேரரசிற்கு எதிரான போர் பிரகடனத்தை அடுத்து சில வாரங்களிலேயே, பாலஸ்தீன் விவகாரம் பற்றி பிரித்தானிய அமைச்சரவை முதன்முறையாக ஆலோசித்தது.
கூட்டத்தில், அடுத்து பிரதமராகப் பதவியேற்கவிருந்த அப்போதைய அரச கருவூலத்தின் தலைவர் டேவிட் லாயிட் ஜார்ஜ், சியோனிசத்தின் மீது அனுதாபம் கொண்ட ஒரு மதச்சார்பற்ற யூதரான தனது சகாவான ஹெர்பர்ட் சாமுவேலிடம், ‘பாலஸ்தீனம் ஒரு யூத அரசாக மாறுவதற்கான நிச்சயத்தை’ தான் உணர்ந்ததாகக் கூறினார்.
போர் விரிவடைந்து கொண்டிருக்கும் தருணத்தில், வெயிஸ்மன் இவ்வாறு எழுதினார்: ‘மான்செஸ்டர் கார்டியனின் ஆசிரியர் திரு C.P. ஸ்காட்டுடன் யூதர்களின் பிரச்சினைகளை பற்றி ஆலோசிக்க வாய்ப்புக்களே வழிசமைத்தது’. மான்செஸ்டரின் தாராளவாத கொள்கை குழாம்களிடையே செல்வாக்கு மிக்க நபராக இருந்த ஸ்காட், லாயிட் ஜார்ஜ் மற்றும் ஹெர்பர்ட் சாமுவேல் ஆகியோருடன் நெருங்கிய உறவை கொண்டிருந்ததுடன், யூத சமூகத்தின் மீது அனுதாபம் கொண்டவராக இருந்தார். ஸ்காட் வெய்ஸ்மனை லாயிட் ஜார்ஜுக்கு அறிமுகப்படுத்தினார், ஜார்ஜ், சியோனிச தலைவரை ஹெர்பர்ட் சாமுவேலை சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.
1914 டிசம்பர் 10 அன்று, சாமுவேல் வெயிஸ்மனை அவரது அலுவலகத்தில் வரவேற்றார். சாமுவேலை சந்தித்த வெயிஸ்மன், பாலஸ்தீனத்தில் குடியேற்றங்கள் மற்றும் நிர்வாக கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதற்கான ஆதரவை தனது முக்கிய கோரிக்கையாக முன்மொழிந்தார். ‘தீர்மாணங்களினால் மாத்திரம் ஒரு தேசியத்தை உருவாக்கிவிட முடியாது, மாறாக, மக்கள் ஒத்துழைப்பும் தலைமுறையாக தொடரும் அர்ப்பணிப்புக்கள் அதனைச் செய்யும்’ என்று அவர் கூறினார். வெயிஸ்மனின் கோரிக்கைகள் மிதமானவையே, என்று கூறிய சாமுவேலின் இலட்சியம் அதைவிடப் பெரிதாக இருந்தது, ‘இதைவிட பெரிய காரியங்களை செய்யவேண்டி இருக்கின்றது’ என்று கூறினார்.
வெயிஸ்மன் பிரித்தானிய தலைவரிடன் அவரது இலட்சிய திட்டங்களை பற்றி வினாவிய போது, சாமுவேல் ‘சூழ்நிலைக்கு ஏற்ப எளிதாக மாற்றக்கூடியதாக தன் திட்டங்கள் அமையும் என்று கூறியதுடன், ‘யூதர்கள் ரயில்வே, துறைமுகங்கள், ஒரு பல்கலைக்கழகம், பாடசாலைகள் இணைந்த ஒரு வலையமைப்பை உருவாக்க வேண்டும்’ அன்று கூறினார்.
மூன்று மாதங்களுக்குள், சாமுவேல் பிரிட்டிஷ் அமைச்சரவையில் ‘பாலஸ்தீனத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஒரு குறிப்பாணையை சமர்பித்தார். பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை உருவாக்கும் ஆர்வம் கொண்ட சாமுவேல், ஒரு சுதந்திர அரசை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் இன்னும் வரவில்லை என்று எண்ணினார்.
மாற்றீடாக, பிரிட்டிஷ் பேரரசிடம் போர் முடிந்ததும் பாலஸ்தீனத்தை இணைத்து, பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் யூத சமூகத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு உதவுங்கள்’ என்று பரிந்துரைத்தார். பின்தங்கிய நாடுகளின் நாகரீக உந்து சக்தியாக, இங்கிலாந்து தனது வரலாற்றுப் பகுதியின் மற்றொரு பகுதியை நிறைவேற்றும் என்று சாமுவேல் வாதிட்டார்.
‘துருக்கியர்களின் கீழ் பாலஸ்தீனம் சிதைந்து விட்டது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, அத்தேசம் மக்களையோ அல்லது உலகிற்கு பயனுள்ள பொருட்களையோ உருவாக்கவில்லை,” என்று அவர் தன் குறிப்பில் எழுதினார். பாலஸ்தீனத்தை இணைப்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கௌரவத்தை உயர்த்தும் என்றும், அதன் போர் முனைப்புகளுக்கு உதவுவதுடன், அமெரிக்காவில் வசித்த 2 மில்லியன் யூதர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள யூதர்களின் நீடித்த விசுவாசத்தை இங்கிலாந்துக்கு பெற்றுவதற்கு வழிவகுக்கும் என்றும் சாமுவேல் வாதிட்டார். பிரிட்டிஷ் அமைச்சரவையின் அமைச்சர் ஒருவர் அதிகாரப்பூர்வ பதிவுகளில் சியோனிச நோக்கத்திற்கு ஆதரவாக ஒரு திட்டத்தை வைப்பது இதுவே முதல் முறை.
அமைச்சரவை மட்டத்திலும் அரசாங்கத்திற்கும் சியோனிஸ்டுகளுக்கும் இடையில் ஆலோசனைகள் தொடர்ந்தன. அந்த நேரத்தில் பிரிட்டனில் சியோனிச இயக்கத்தின் பிரதிமுகமாக மாறிய வைஸ்மேன், லாயிட் ஜார்ஜ் தலைமையில் இருந்த ஆயுதங்கள் அமைச்சகத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
போர்க்காலத்தில், அசிட்டோன் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி அதிகரிப்பிற்காக பிரிட்டன் இருந்தபோது, ஒரு ஆய்வகத்தில் நொதித்தல் செயல்முறை மூலம் அசிட்டோனை உற்பத்தி செய்வதற்கான வழியைக் கண்டுபிடித்ததன் மூலம் வைஸ்மேன் ஒரு தீர்வைக் கொண்டு வந்தார். மேலும் அரசாங்கத்தின் உதவியுடன் வர்த்தக ரீதியிலான அளவில் அசிட்டோனின் உற்பத்தி தொடங்கியது. இது லண்டனில் உள்ள அரசியல் ரீதியான வெய்ஸ்மானின் நற்பெயரை உயர்த்தியது. லியோட் ஜார்ஜ், வைஸ்மானுடன் தான் நடத்திய உரையாடலைப் பற்றி தனது நினைவுக் குறிப்பில் நினைவு கூர்ந்தார்:
‘தேசத்திற்கு நீங்கள் பெரும் சேவை ஆற்றியுள்ளீர்கள், உங்களை கௌரவிக்கும் முகமாக மாட்சிமை மிகுந்த பேரரசரிடம் பரிந்துரைக்கும்படி பிரதமரை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.’
‘எனக்கு எதுவும் வேண்டாம்’
‘இருந்தாலும், இந்நாட்டுக்கு நீங்கள் செய்த உயரிய உபகாரத்திற்கு அங்கீகாரமாக நாங்கள் செய்யக்கூடியது ஏதும் உண்டா?’ என்று கேட்டேன்.
‘நிச்சயமாக, நீங்கள் என் மக்களுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,’ என்றார்.
‘யூதர்கள் புனித பூமிக்கு திருப்பி அனுப்பப்படுவதைப் பற்றி அவர் தனது அபிலாஷைகளை விளக்கினார். அதுதான் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தேசிய இல்லம் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனத்தின் அடிப்படையும் தோற்றமும் ஆகும்’ என்று பால்ஃபோர் பிரகடனத்தைப் பற்றி லியோட் ஜார்ஜ் எழுதுகிறார்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த சிக்கலான புவிசார் அரசியல் மாற்றங்களை லியோட் ஜார்ஜ் ஆழமாக கணிக்கவில்லை. போர் முயற்சிகளிக்கு வெய்ஸ்மானின் ஆதரவு, அவரது தனிப்பட்ட ஆளுமை, போர்க்கால பிரிட்டனின் உயரிய அந்தஸ்திற்கு அவரது பங்களிப்பினால் பெற்றுக்கொண்ட மரியாதை ஆகியன அவருக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளிடம் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தித்தந்தது என்றாலும், பிரிட்டன் தனது சொந்த நலன்களையும் கவனத்தில் கொண்டது.
1915-16 காலகட்டத்தில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் நேச-அச்சு ஆகிய இரு தரப்புக்கும் பல முனைகளில் போர் மூண்டது. நேச நாட்டு சக்திகள் பாரிய அழுத்தத்தின் கீழ் இருந்தன. அமெரிக்கா இன்னும் போரில் பங்கேற்கவில்லை; மென்ஷிவிக்குகள், போல்ஷிவிக்குகளின் எழுச்சி காரணமாக ரஷ்யா புரட்சிகால நிலையின்மையில் சிக்கியிருந்தது.
பிரிட்டிஷ் தலைவர்கள் சியோனிஸ்டுகளை ஆதரித்தால், வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டனர். சாமுவேல் ஹெர்பர்ட் தனது குறிப்பில் எழுதியது போல், யூதர்களின் ஆதரவைப் பயன்படுத்தி அமெரிக்காவை போருக்குள் கொண்டு வருவதுடன், ரஷ்யாவை தொடர்ந்தும் போரில் பங்குகொள்ள வைக்க முடியும் என்று ஊகித்தனர்.
முதலாம் உலகப்போர் முடிந்தவுடன் ஒட்டோமான் நிலங்களைப் பிரிக்கும் யோசனையை லாயிட் ஜார்ஜ், ஆர்தர் பால்ஃபோர் ஆகியோரும் ஆதரித்தனர். பாலஸ்தீனத்தில் கணிசமானளவு யூதர்கள் இருப்பது மேற்கு ஆசியாவில் பிரிட்டனின் நலன்களுக்கு உதவும் என்று அவர்கள் கருதினர். யூதர்களின் கேள்விக்கு ஒரு தீர்வை வழங்குவதன் மூலம் பிரிட்டன் தார்மீக தலைமையை ஏற்க முடியும் என்ற எண்ணப்பாடு 1916 டிசம்பரில் லாயிட் ஜார்ஜ் பிரதமராகவும், ஆர்தர் பால்ஃபோர் அவரது வெளியுறவுச் செயலாளராகவும் பதவியேற்றதும், இந்தச் சிந்தனை நிதர்சணமாக வெளிப்பட்டது.
