புதுடெல்லி: ஊழல் தொடர்பாக அதானியுட்பட மேலும் பலர் மீது அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US SEC) ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது சமீப காலங்களில் ஒன்றும் புதிதல்ல. கடந்த ஐந்தாண்டுகளுக்குள் $25 மில்லியன் அபராதம் கட்டப்பட்டதாக இது போன்ற இன்னொரு வழக்கும் இருந்திருக்கின்றது. இவ்வழக்கிலும், ஒரு இந்திய மாநில அரச ஊழியருக்கு கையூட்டல் கொடுக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது.
அதானி கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் போலவே, வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை (FCPA) மீறிய குற்றங்களுக்காக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் 2019ம் ஆண்டில் US SECக்கு $25 மில்லியனை அபராதமாக செலுத்தியது. இந்நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளில் இருவர் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கங்களில் உள்ள அதிகாரிகளுக்கு “மில்லியன் கணக்கான டாலர்களை” லஞ்சமாக வழங்க உதவிய குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்கும் இந்த அபராதம் செலுத்தப்பட்டது.
வழக்கு ஆவணத்தை திபிரிண்ட் மதிப்பாய்வு செய்ததன் படி, 2012 முதல் செப்டம்பர் 2016 வரை நிறுவனத்தின் தலைவராக இருந்த கார்டன் ஜே. கோபர்ன் மற்றும் 2007 முதல் நவம்பர் 2013 வரை நிறுவனத்தின் பொது ஆலோசகராகவும் செயலாளராகவும் பணியாற்றி, அதன்பின் டிசம்பர் 2013 இலிருந்து நவம்பர் 2016 வரை நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவராகவும், தலைமை சட்ட மற்றும் பெருநிறுவன விவகார அதிகாரியாகவும் இருந்த ஸ்டீவன் ஈ. ஸ்வார்ட்ஸ் ஆகியோரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது குற்றச்சாட்டுகளின் முக்கிய அம்சமாகும்.
காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், அதன் வணிகத்தின் பெரும்பகுதி இந்தியாவில் இயங்கும் அதன் கிளை நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது.
“ஏப்ரல் 2014 இல், கோபர்ன் மற்றும் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னையில் காக்னிசன்ட் கிட்ஸ் வளாகத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான திட்டமிடல் அனுமதியைப் பெறவேண்டி, தமிழ்நாட்டில் திட்டமிடல் மற்றும் கட்டிட அனுமதி பெற்றுக்கொடுப்பதில் செல்வாக்குமிக்க ஒரு மூத்த அரசு அதிகாரிக்கு காக்னிசன்ட் சார்பாக 2 மில்லியன் டாலர் கையூட்டாக கொடுக்க ஒரு ஒப்பந்ததாரக்கு அனுமதி அளித்திருந்தனர்” என்று அந்த ஆவணம் குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்ற ஆவணப்படி, காக்னிசன்ட் ஆதாயம் பெறுவதற்காக, அரச அதிகாரிக்கு கையூட்டலாக மேலதிகமாக $500,000 தருவதாக கோர்பன் ஒப்பந்ததாரிடம் உறுதியளித்திருக்கின்றார்.
தமிழக அரசு அதிகாரியின் பெயர் அநாமதேயமாகவே இருக்கின்றது. மேலும், மகாராஷ்டிரா அரசு அதிகாரி ஒருவருக்கு பூனேயிலும், தமிழக அரசு அதிகாரி ஒருவருக்கு சிறுசேரியிலுமாக மொத்தம் 1.6 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அனுமதிக்கு முன் கட்டுமானம்
ஆவணங்களின்படி, 2011ல் இந்தியாவிலேயே, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மிகவிசாலமான வளாகமாக காக்னிசன்ட் தனது 2.7 மில்லியன் சதுர அடி விஸ்தாரமுடைய கிட்ஸ் வளாக கட்டுமானத்தைச் சென்னையில் தொடங்கியது. கட்டிட பூரணத்துவனம் மற்றும் அதன் பயன்பாட்டு ஒப்புதல் சார்பான அனுமதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவோ அல்லது பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே காக்னிசண்ட் தனது கட்டுமானத்தை தொடங்கியது.
2013 பிப்ரவரியில் தான் இந்த பணிக்காக பணியமர்த்தப்பட்ட ஒப்பந்ததாரர் சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையத்தில் காக்னிசன்ட் சார்பாக திட்டமிடல் அனுமதிக்காக விண்ணப்பித்தார்.
ஆவணங்களின்படி, ஒரு வருடம் கழித்து, 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவர் “திட்டமிடல் அனுமதி வழங்குவதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான நிபந்தனையாக” 2 மில்லியன் டாலர் லஞ்சமாகக் கேட்டிருக்கின்றார்.
ஏப்ரல் 2014 இல் நிறுவனத்திற்குள் நடந்த அடுத்தடுத்த உரையாடல்களின் போது, “அரசாங்க அதிகாரி கோரிய லஞ்சத்தை செலுத்துவதற்காக” ஒப்பந்தக்காரருக்கு 2 மில்லியன் டாலர் செலுத்த கோபர்னும் ஸ்வார்ட்ஸும் அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
கையூட்டல், அச்சுறுத்தல்கள் மற்றும் ஒப்புதல்
நீதிமன்ற ஆவணங்களின்படி, காக்னிசன்ட் சார்பாக லஞ்சம் கொடுக்க ஒப்பந்தக்காரரை வற்புறுத்துவதற்காக, கோபர்ன், “காக்னிசன்ட் நிறுவனத்தின் சார்பாக லஞ்சம் கொடுக்க மறுத்தால் கிட்ஸ் வளாக கட்டுமான எதிர்கால கொடுப்பனவுகளை நிறுவனம் நிறுத்தி வைக்கும்” என்று ஒப்பந்ததாரரிடம் தெரிவிக்குமாறு காக்னிசண்ட் நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் அதிகாரியிடம் உத்தரவிட்டிருக்கின்றார்.
“கோபர்ன் நிர்பந்தபடுத்தியபடி, ஒப்பந்த நிறுவனம் இறுதியில் காக்னிசென்ட்டின் கோரிக்கைக்கு இணங்கியது, மேலும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் 2014 தொடக்கத்தில் ஒரு ஆலோசகர் மூலம் லஞ்சம் கொடுத்தது” என்று ஆவணம் கூறுகிறது. “கோபர்ன் பின்னர் லஞ்சம் கொடுப்பதற்காக ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக $500,000 செலுத்த அங்கீகாரம் அளித்திருக்கின்றார்.”
காக்னிசென்ட் அனுமதியைப் பெறவும், அனுமதி வராத பட்சத்தில் ஏற்படும் செலவை மிச்சப்படுத்துவதிலும் இந்த லஞ்சம் வெற்றிகரமாக இருந்தது என்று ஆவணம் குறிப்பிடுகிறது.
“நவம்பர் 5, 2014 அன்று, காக்னிசன்ட் சார்பாக ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து ஊழல் பணம் பெற்றதன் விளைவாக, சென்னை மெட்ரோ மேம்பாட்டு ஆணையம் காக்னிசண்டிற்கு கிட்ஸ் வளாகத்திற்கு தேவையான திட்டமிடல் அனுமதியை வழங்கியது, இதன் மூலம் கட்டுமானத்தை முடிக்கவும், பயன்படுத்துவதற்கும் அனுமதித்தது” என்று ஆவணம் குறிப்பிடுகிறது.
“கிட்ஸ் வளாக பயன்பாட்டிற்கு அனுமதி தாமதித்திருந்தாலோ அல்லது வழங்கப்படாமலிருந்தாலோ ஏற்பட்டிருக்கும் மேலதிக குத்தகை செலவுகளை இதனால் காக்னிசன்ட் தவிர்க்க முடிந்தது” என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.
கோபர்ன், ஸ்வார்ட்ஸ் மற்றும் அவர்களது சகாக்கள், வீடியோ அழைப்புகள் மூலம் முன்னதாகவே கலந்துரையாடி ஒப்புக்கொண்டபடி, 2.5 மில்லியன் டாலர் தொகையினை ஒப்பந்தக்காரரால் தொடர்ச்சியான சமர்ப்பிக்கப்பட்ட போலியான மாற்ற ஆணைகள் மூலம் பரிவர்த்தனைகள் நிதி புத்தகங்களில் மறைக்கப்பட்டு KITS வளாகம் நிறைவடையும் போது கோபர்னால் அங்கீகரிக்கப்பட்டது. மாற்ற ஆணை என்பது கட்டுமான ஒப்பந்தத்தை மாற்றியமைக்கும் ஆவணம் ஆகும்.
இன்னும் பல லஞ்சங்கள்
காக்னிசன்ட் அதிகாரிகள் அனுமதி பெற லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் பல நிகழ்வுகளை இந்த ஆவணம் எடுத்து காட்டுகிறது.
புனேவில் உள்ள ‘லஞ்சத் திட்டமும்’ அதே ஒப்பந்தக்காரரை உள்ளடக்கியதாகவும், வணிக உத்தியோகபூர்வ வசதியைக் கட்டுவதற்கான அனுமதிகளுக்கு தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
“தேவையான அனுமதிகளை வழங்குவதற்கு முன்பே, 2012 ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கியிருக்கின்றது” என்று நீதிமன்ற ஆவணம் குறிப்பிடுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்கு ஈடாக ஒரு இந்திய அதிகாரிக்கு 770,000 டாலர் செலுத்த காக்னிசன்ட் இந்தியா ஒப்பந்த நிறுவனம்-1 க்கு அங்கீகாரம் அளித்துள்ளது. 2013 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணம் கொடுக்கப்பட்டதன் பின் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது “.
காக்னிசன்ட் இந்தியா, ஒப்பந்ததாரருக்கு ஏற்பட்ட லஞ்ச செலவீணங்களை 2014 ஜனவரியில், ஈடுசெய்திருக்கின்றது.
சிறுசேரியில், காக்னிசன்ட் இந்தியா திட்ட அனுமதி, உள்ளூர் மின்சார வாரியத்தின் மின் அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி உட்பட கட்டுமானம் தொடர்பான பல அனுமதிகளை வழங்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு மொத்தம் $840,000 லஞ்சம் கொடுக்க அதே ஒப்பந்தக்காரருக்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
“ஒப்பந்த நிறுவனம்-1 2012 இல் பணம் செலுத்தியது, பின்னர் காக்னிசன்ட் அந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அனுமதிகளைப் பெற்றது” என்று ஆவணம் கூறியது. “காக்னிசன்ட் இந்தியா 2015 மற்றும் 2016 க்கு இடையில் தவணை முறையில் லஞ்சம் செலுத்தியதற்காக ஒப்பந்த நிறுவனம்-1 ஐ திருப்பிச் செலுத்தியது.”
காக்னிசன்ட் ஒத்துழைத்து கட்டணங்களை தீர்க்கிறது
அதன் தணிக்கைக் குழுவின் உள் விசாரணையின் போது உருவாக்கப்பட்ட தவறான நடத்தையை காக்னிசன்ட் தானாக முன்வந்து வெளிப்படுத்தியதாக எஸ். இ. சி குறிப்பிட்டது. ஆவணங்களை தானாக முன்வந்து சமார்பித்ததாகவும், தற்போதைய அல்லது முன்னாள் ஊழியர்களை எஸ். இ. சி நேர்காணல்களுக்கு அனுமதிப் பதன் மூலமும் நிறுவனம் ஒத்துழைத்தது.
லஞ்சம் மற்றும் மறைத்தலில் ஈடுபட்ட மற்றும் அது பற்றி அறிந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் அல்லது கண்டித்தல், புதிய தலைவர், பொது ஆலோசகர் மற்றும் உலகளாவிய ரியல் எஸ்டேட் மற்றும் கொள்முதல் தலைவர்கள் உட்பட புதிய நிர்வாக பணியாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பல தீர்வு நடவடிக்கைகளுக்கும் காக்னிசன்ட் ஒப்புக் கொண்டது.
“காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் கார்ப்பரேஷன் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை (FCPA) மீறிய குற்றச்சாட்டுகளுக்கு அபராதமாக் 25 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது, மேலும் நிறுவனத்தின் இரண்டு முன்னாள் நிர்வாகிகள் இந்திய அரசாங்க அதிகாரிக்கு மில்லியன் கணக்கான டாலர்களை லஞ்சமாக செலுத்தியதில் தங்கள் பங்கிற்காக குற்றம் சாட்டப்பட்டனர்” என்று எஸ்இசி 15 பிப்ரவரி 2019 தேதியிட்ட வெளியீட்டில் தெரிவித்துள்ளது.