scorecardresearch
Saturday, 14 March, 2026
முகப்புஇந்தியாபிரதமர் பயிற்சித் திட்டத்தை, ரூ.9,000 என்ற உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் அரசு சீரமைக்க உள்ளது.

பிரதமர் பயிற்சித் திட்டத்தை, ரூ.9,000 என்ற உயர்த்தப்பட்ட உதவித்தொகையுடன் அரசு சீரமைக்க உள்ளது.

அக்டோபர் 2024-இல் 12 மாத காலப் பயிற்சியுடன் முதன்முதலில் தொடங்கப்பட்ட PMIS-இன் அடுத்த கட்டமானது, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்களை அனுமதிப்பதுடன், பயிற்சியின் கால அளவை 6 முதல் 9 மாதங்களாகக் குறைக்கும் என்று தெரியவந்துள்ளது.

புது தில்லி: அக்டோபர் 2024-இல் தொடங்கப்பட்டதிலிருந்து விண்ணப்பதாரர்களிடமிருந்து மந்தமான வரவேற்பையே பெற்றிருந்த நிலையில், அரசின் முதன்மைத் திட்டமான ‘பிரதமர் பயிற்சித் திட்டம்’ (PMIS) —அதிகப்படியான உதவித்தொகை, தளர்வான தகுதி வரம்புகள் மற்றும் குறைந்த கால அளவிலான பயிற்சி ஆகிய அம்சங்களுடன்— தனது அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக திபிரிண்ட் செய்தி நிறுவனம் அறிந்துள்ளது.

திருத்தப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ், மாத உதவித்தொகை முன்பு வழங்கப்பட்ட ரூ.5,000-லிருந்து ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ரூ.8,100 அரசாங்கத்தால் வழங்கப்படும் என்றும், எஞ்சிய ரூ.900 நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு (CSR-corporate social responsibility) நிதிகள் வாயிலாக வேலை அளிப்பவர்களால் வழங்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், இளைஞர்களிடையே இத்திட்டத்தின் ஈர்ப்பை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும், வயது வரம்பு தகுதி முன்னிருந்த 21-24 ஆண்டுகளிலிருந்து 18-25 ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், பயிற்சி கால அளவு (internship duration) முன்னிருந்த 12 மாதங்களிலிருந்து 6-9 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியின் இறுதி கால அளவை வேலை அளிப்பவரே தீர்மானிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டம் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது; இதன் அடுத்த கட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், இதற்கானப் பயிற்சி வாய்ப்புகள் (internship opportunities) அடுத்த வாரம் முதல் பதிவேற்றம் செய்யப்படத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2024-25 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘PMIS’ திட்டம், 12 மாத காலப் பயிற்சி காலத்துடன் அக்டோபர் 2024-இல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் அசல் வடிவமைப்புப்படி, விண்ணப்பதாரர்கள் மத்திய அரசிடமிருந்து ஒரு முறை வழங்கப்படும் ரூ.6,000 மானியத்தையும், மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகையையும் பெற வழிவகை செய்யப்பட்டிருந்தது; இந்த உதவித்தொகையில் ரூ.4,500 அரசாங்கத்தாலும், மீதமுள்ள ரூ.500 நிறுவனங்களின் ‘CSR’ (நிறுவன சமூகப் பொறுப்புணர்வு) நிதியிலிருந்து வேலை அளிப்பவர்களாலும் வழங்கப்பட இருந்தது.

எனினும், இத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட முன்னோடிச் சுற்றுகளில், இடஞ்சார்ந்த கட்டுப்பாடுகள்—அதாவது பல விண்ணப்பதாரர்கள் 5 முதல் 10 கி.மீ-க்கு அப்பால் பயணிக்க விரும்பாத நிலை—நீண்ட காலப் பயிற்சி காலம் மற்றும் பயிற்சி முடிந்த பிறகு வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் இல்லாதது ஆகிய காரணங்களால், பங்கேற்பு குறைவாகவும், பாதியிலேயே விலகுவோர் எண்ணிக்கை அதிகமாகவும் காணப்பட்டது.

அக்டோபர் 2024-இல் தொடங்கிய முதல் முன்னோடிச் சுற்றில், நிறுவனங்கள் 60,866 பயிற்சி வாய்ப்புகளை (internship offers) வழங்கின. இவற்றில் 28,144 வாய்ப்புகள் விண்ணப்பதாரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டன; ஆனால், இறுதியில் 8,760 விண்ணப்பதாரர்கள் மட்டுமே பயிற்சியில் இணைந்தனர்.

இத்திட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும், பாதியிலேயே விலகுவோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. 12 மாத காலப் பயிற்சிப் பருவத்தின் நடுவிலேயே, 4,702 விண்ணப்பதாரர்கள்—அதாவது பயிற்சியில் இணைந்தவர்களில் 53.6 சதவீதம் பேர்—விலகிச் சென்றனர்.

இறுதியில், முதல் சுற்றில் 3,417 விண்ணப்பதாரர்கள் மட்டுமே முழுமையானப் பயிற்சியையும் நிறைவு செய்தனர்.

ஏப்ரல் 2025-இல் தொடங்கப்பட்ட இரண்டாவது முன்னோடிச் சுற்றிலும், பங்கேற்பு மந்தமாகவே இருந்தது. 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 71,195 பயிற்சி வாய்ப்புகளை வழங்கின; ஆனால், 24,638 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அவற்றை ஏற்றுக்கொண்டனர்.

இவர்களில், 7,300 விண்ணப்பதாரர்கள் நேரடியாகப் பயிற்சியில் இணைந்தனர்; அதேவேளையில், 2,464 விண்ணப்பதாரர்கள் (33.7 சதவீதம்) பயிற்சி காலம் முடிவதற்கு முன்பாகவே அதிலிருந்து விலகினர்.

இப்பயிற்சிகள் இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ நிறைவடைய உள்ளதால், இரண்டாவது சுற்றை இறுதியில் எத்தனை விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிறைவு செய்வார்கள் என்பது குறித்த தரவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

தொடர்புடைய கட்டுரைகள்