scorecardresearch
Saturday, 7 February, 2026
முகப்புதேச நலன்ஒருவரின் டீப் ஸ்டேட் மற்றொருவரின் நான்-ஸ்டேட். உண்மையான அதிகாரம் ஷேலோ ஸ்டேடிடம் உள்ளது

ஒருவரின் டீப் ஸ்டேட் மற்றொருவரின் நான்-ஸ்டேட். உண்மையான அதிகாரம் ஷேலோ ஸ்டேடிடம் உள்ளது

ஜனநாயக நாடுகளில் டீப் ஸ்டேட் சதி கோட்பாடுகளின் உந்து சக்தியாக இருந்து வருகிறது. இத்தாக்கத்தில் அமெரிக்கா முன்னிலை வகிக்கின்றது, இந்தியாவிலும் இத்தாக்கம் வேகமாக பரவுகின்றது. இன்னும் பல ஐரோப்பிய ஜனநாயக நாடுகளும் இந்த வரிசையில் இணைந்துள்ளன.

2025 தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ‘ஆண்டிற்க்கான சொல்’ அந்தஸ்த்தை பெறுவதில் ‘டீப் ஸ்டேட்’ (Deep State) முன்னணியில் இருப்பதாகத் தோன்றுகின்றது. ஏதேனும் தவறானால் நாம் டீப் ஸ்டேட் எனும் கபடதாரி மீது பழி சொல்கின்றோம்.

இருப்பினும், அது வெறும் கற்பனை அல்ல. ‘ஷேலோ ஸ்டேட்’ மற்றும் ‘நான்-ஸ்டேட்’ போலவே ‘டீப் ஸ்டேட்’ என்பதும் நமது வாழ்க்கையிலும், நிர்வாக அமைப்பிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்கின்றது. நாம் இந்த சொற்களையும் யதார்த்தத்தில் அவற்றின் பிணைப்பையும் அறிந்துகொள்வோம். பொதுவாக டீஎஸ் (DS) என்றழைக்கப்படும் “டீப் ஸ்டேட்”  ஜனநாயக நாடுகளில் சதி கோட்பாடுகளின் உந்து சக்தியாக உருவாகியுள்ளது.

நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டியது,​​ டீப் ஸ்டேட் என்பதன் அகராதி/விக்கிபீடியா வரையறை: ஒரு அரசின், அரசியல் தலைமையை பொருட்படுத்தாமல் சுயாதீனமாக தன் சொந்த நோக்கங்களையும் நிகழ்ச்சி நிரலையும் பின்பற்றும், இரகசியமானதும், அங்கீகரிக்கப்படாததுமான அதிகார வலைப்பின்னல். நிச்சயமாக வரைவிலக்கணப்படி, இவை எதிர்மறையான மற்றும் சதித்திட்ட அர்த்தத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, நமது வழக்கமான மூன்று-உதாரண சூத்திரத்தைப் பின்பற்றி, இந்த குறிப்பிட்ட பிரச்சினைகள்/நிகழ்வுகளை பட்டியலிடுவோம்.

  • பங்களாதேஷில் ஆட்சி மாற்றம். எதிர்பாராதது, பரந்துபட்ட வன்முறை, தலைமைத்துவமற்ற நாடகபாணியிலான அரங்கேற்றம். இதற்கு அமெரிக்க டீப் ஸ்டேட் மீது பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அமெரிக்க டீப் ஸ்டேடின் வெற்றி என்றும் கூறப்படுவதுடன், இந்தியாவிலும் இத்தகைய கபட கலவரங்கள் நிகழ மறைமுகமாக திட்டமிடப்பட்டதாக கருதப்படுகின்றது. பைடன் நிர்வாகமும் டீப் ஸ்டேடும் நரேந்திர மோடியை விரும்பவில்லை என்பது நிதர்சனம்.
  • அடுத்து, இரண்டு வருடங்களாக அதானி குழுமத்தைப் பற்றிய தொடர் குற்றச்சாட்டுகள். இவற்றில் பல வெளிப்படைத்தன்மையற்ற நிழல்-வாதி ஹிண்டன்பர்கின் அறிக்கையிலிருந்து வந்தன, அவை வந்த வேகத்திலேயே அரவமற்று மறைந்து போயின. அவ்வாறே OCCRP (Organised Crime and Corruption Reporting Project) ஆல் ஆதரிக்கப்பட்ட அல்லது நிதியளிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வந்த பல கதைகளும் இருந்தன. அத்துடன் ICIJ, (International Consortium of Investigative Journalists) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பும் உள்ளது. இவையிரண்டும் ஜார்ஜ் சோரோஸ் நிறுவிய ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்களால் ஆதரிக்கப்படுகின்றன. சோரோஸ் பங்கு மற்றும் நாணய சந்தையில் சூறையாடும் ஒரு இடதுசாரி சார்புடைய அராஜகவாதி (நான் அவரை முற்போக்குவாதி என்று குறிப்பிடமாட்டேன்) என்று அடையாளப்படுத்தப்பட்டவர். பிரித்தானிய பவுன்ட் மற்றும் இங்கிலாந்து வங்கியின் பெறுமதி வீழ்ச்சிக்கு அவரே காரணம் (1992), அது மட்டுமன்றி, 1997 நிதி நெருக்கடியில் பல முக்கிய கிழக்கு ஆசிய நாடுகளின் சிதைவிற்கும் அவரே சூத்திரதாரி. இவரது இந்த இரண்டு அமைப்புகளும் அதானி பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுத்த விசாரணைகளை ஆதரித்தன. இச்சதி கோட்பாடு மோடி அரசாங்கத்தின் மீதான மறைமுக தாக்குதல் என்பது வெளிப்படை. தற்போதைய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்திலும் கூட, பல ஆண்டுகளில் ‘வெளிநாட்டுக் குளறுபடிகள்’ இல்லாமல் தொடங்கும் முதல் அமர்வு இதுவே என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
  • மூன்றாவதாக, சீக்கிய தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இரண்டு சங்கடமான மற்றும் சவாலான சூழ்நிலைகளை இந்தியா முறையே அமெரிக்காவிலும் கனடாவிலும் சந்திக்க வேண்டியிருந்தது. அதானியின் விஷயத்தில் பைனான்சியல் டைம்ஸ்  செய்தது போல, இரு சந்தர்ப்பத்திலும், அமெரிக்க ஊடகங்கள் இந்நிகழ்வுகளை முக்கியப்படுத்தி மிகைப்படுத்தி செய்திகளை வெளியிட்டன. இவை எதுவும் தற்செயலாக நடந்திருக்க முடியாது என்பதே இப்போதைய வாதம். இது டீப் ஸ்டேடின் வேலையாக இருந்திருக்க வேண்டும். டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் மற்றும் அவர்களது லெப்டினன்ட்கள் கூட இப்போது அரசியல் ஊழலை ஒழிக்க தொடங்கிய நிலையில் டீப் ஸ்டேட்டைப் பற்றி புகார் செய்துகொண்டிருப்பதை நீங்களே அறிவீர்கள்.

இதுவரை அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது, இப்போது ஒவ்வொன்றையும் சற்றே விரிவாக ஆராயலாம். பங்களாதேஷ் விஷயத்தில், அமெரிக்க அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் செயல்பட்ட சில ‘அங்கீகாரமற்ற ஆனால் திறன்மிக்கதொரு இரகசிய ‘ குழுவின் கைவேலை என்று உறுதியாக நம்ப முடியுமா? கடந்த மாதம்,  தலைமை ஆலோசகர் முகமது யூனுஸைச் சந்திக்க டாக்காவிற்கு பயணம் செய்த ஜார்ஜ் சோரோஸின் மகனின் படங்களை நீங்கள் பார்த்திருந்தால், உங்களின் இந்த சந்தேகங்கள் வலுப்பெறும். அத்துடன், யூனுஸின் தோள்மீது கைபோட்டு நிற்கும் பைடனின் படத்தையும் பாருங்கள்.

ஹசீனாவின் சரிவுக்கு அமெரிக்கர்கள் உண்மையிலேயே காரணமாக இருந்தால், அது டீப்-ஸ்டேட் சுயாதீனமாக செயல்பட்டதன் விளைவா அல்லது பைடன் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டதன் விளைவா? இது சதி கோட்பாட்டாளர்களின் டீப்-ஸ்டேட் வரையறையை மீறாது.

நிழலான, உருவமற்ற, தெளிவாக வரையறுக்கப்படாத அமைப்புக்கள் நன்கறிந்த வெளிப்படையான அரசின் கருவிகளாக செயற்படுகின்றன. ‘லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமதுவை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்?’ என்பது ஒரு சிக்கலான கேள்வி. பாக்கிஸ்தானியர்களைக் குறிப்பிடுவது போன்று, ‘அரசு-அல்லாத அமைப்பு’ என்றா அல்லது ‘டீப் ஸ்டேட்’ என்று குறிப்பிடுவதா? இவ்விரண்டு விளிப்புக்களும் பாக்கிஸ்தான் அரசின் ஏற்தகு மறுதலிப்பை வெளிப்படுத்தும். பிணைந்த அவையே அரசு, அவை இந்தியாவுக்கு சொல்லொணா தீங்கினை விளைவிக்கும்.  

ஹிண்டன்பர்க் மற்றும் OCCRP இன் பெரும்பாலான சாடல்களில், அமெரிக்க அரசின் பங்களிப்பு தெளிவாக இல்லாததால், அதானி பிரச்சினை சற்று சிக்கலானதாக இருக்கலாம். அவ்வாறெனில், இது டீப்-ஸ்டேடின் வேலையா? ஆனால், அமெரிக்க நீதித்துறை, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் ஹிண்டன்பர்க்கை விட அதிகப்படியான அதைவிட மிக அச்சுறுத்தலான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அப்படியானால், ஹிண்டன்பர்க்கும் OCCRP-யும் சுயாதீனமாகச் செயல்பட்டனவா அல்லது அரசுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டனவா? அல்லது மறுதலையாக இருக்குமா?

இறுதியாக, கனடாவிலும் அமெரிக்காவிலும் நிஜ்ஜார் மற்றும் பன்னுன் தொடர்பாக இந்தியா எதிர்கொண்ட பிரச்சினைகள். சில அமெரிக்க மற்றும் கனேடிய ஊடகங்கள் இந்த விஷயத்தை பற்றி தீவிரமாக பேசியதால், இது டீப் ஸ்டேடின் செயல்பாடாக இருக்கலாம் என்ற கருத்து பரவியது. இருப்பினும், அவர்களின் கதைகள் அனைத்தும் அவர்களின் தனிப்பட்ட புலனாய்வு அலுவலர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.

அரசாங்கங்களின் ஆட்சிக்காலத்தில் அதன் அதிகாரத்துவம், சிவில் சேவைகள், காவல்துறை, ஆயுதப்படைகள், நீதித்துறை, ஒழுங்குமுறை அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் பிற அரசமைப்பு நிறுவனங்கள், அவற்றின் செயற்பாடுகள் ‘டீப் ஸ்டேட்’டை புரிந்துகொள்வதற்கான ஒரு வழி.

அவர்கள் விதிகளைப் பின்பற்றுகிறார்கள், ஸ்திரத்தன்மையை வழங்குவதுடன் தேசிய வளங்களை பாதுகாக்கிறார்கள். 1996 இலிருந்து 1999 வரையான சொற்ப காலப்பகுதியில் இந்தியாவில் ஆறு பிரதம மந்திரிகள் ஆட்சிகட்டிலேறினர். இச்சிக்கலான கட்டத்தில், இந்தியாவின் இறையாண்மையையும், ஆட்சி வியூகங்களின் இரகசியங்களையும் சிதையாமல் பேணி பாதுகாத்த பெருமை மெச்சத்தக்க அரசு ஊழியர் குழாம், இராணுவத் தலைவர்கள், மற்றும் அணு விஞ்ஞானிகளையே சாரும்.

அதே அமைப்பு வித்தியாசமாக செயல்பட முடியும். இத்தனை தசாப்தங்களாக ‘அமைதியாக’  அணுசக்தி வளங்கள் அனைத்தையும் ரகசியமாக வைத்திருந்து, 1998 இல் அவற்றை வெளிப்படுத்தி, இராணுவமயமாக்கியதன் காரணம் என்ன?

வாஜ்பாய் அரசு அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொண்டதன் விளைவே அது. இந்த டீப் ஸ்டேட், தொடர்ச்சியையும், பரந்த கொள்கைகள் மற்றும் இறையாண்மையின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறபோதும், அரசியல் தலைவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப மாறு படுகின்றது. அவற்றை, நாங்கள் ஷேலோ ஸ்டேட் என்று விவரிக்கிறோம்.

ஷேலோ அல்லது ஆழமற்ற என்பது பலவீனம் அல்ல, அவை தற்காலிகமானவை என்பதை குறிக்கின்றது. நடைமுறையில், அவையே அதீத செல்வாக்கை கொண்டவை. அரசியல் தலைமைகள் அரச நிர்வாகங்களைத் தங்கள் கைக்குள் வைத்திருப்பதால் மட்டுமே இது சாத்தியப்படுகின்றது. ஷேலோ ஸ்டேட் பலவீனமாக இருக்கும்போதுதான் டீப் ஸ்டேட் தலை எடுக்கிறது. இதன் விளைவுகளை நாம் மன்மோகன் சிங் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது கண்கூடாகக் கண்டோம்.

இக்கைச்சாத்துக்கு எதிரான முரண்பாடுகளின் பெரும்பகுதி, அவரது அலுவலகம் மற்றும் அவரது வெளியுறவு அமைச்சகத்திலிருந்த சிவில் ஊழியர்கள் மூலமாக கசிந்த தகவல்களிலிருந்தும், ஓரளவு ஆழமாக வேரூன்றிய அமெரிக்க எதிர்ப்பு உணர்விகளாலும், இச்சீர்திருத்த மாற்றம் பாதகமானது என்று ஒருதலைப்பட்சமாக உருவகித்த ஒருசாராராலும் உருவானது.

அதனால்தான் அந்த அணுசக்தி பொறுப்புச் சட்டம் முழு ஒப்பந்தத்தையும் பாழாக்கும் வகையில் வீரியமற்றுப்போனது. மோடி அரசின் சமீபத்தைய பட்ஜெட் அறிக்கையும், மோடி-டிரம்ப் கூட்டு அறிக்கையும் இந்நிலையை மாற்றுவதாக உறுதிசெய்கின்றன. 

இறுதியாக, நான்-ஸ்டேட் தோற்றப்பட்டினை எங்கு காண்பது? பண்டைய காலங்களிலிருந்து, அதிகாரமிக்கவர் தங்கள் நோக்கத்தை நடைமுறைப்படுத்த நான்-ஸ்டேட் ஆக்டர்ஸ் (non-state actors) எனும் கேடயத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.

கிமு 3 ஆம் நூற்றாண்டின் அசோகர் காலத்து பிக்குகள், இடைக்கால சூஃபிகள் முதல் ஆக்ஸ்பாம் வரை, ஓமித்யார் முதல் தற்போதைய சோரோஸ் வரை, நான்-ஸ்டேட் ஆக்டர்ஸ் ஒரு அதிகாரமுடைய அரசுடன் இணைந்து பணியாற்றும்போது மட்டுமே போதிய அதிகாரத்தைப் பெறுகிறார்கள். உதாரணமாக நோக்கினால், USAID என்றால் என்ன? அது டீப் ஸ்டேட் ஆக இருக்க முடியாது, ஏனெனில், அது அமெரிக்க அரசின் ஒரு கருவியாக செயற்படுகின்றது. மார்கோ ரூபியோ இப்போது அதன் நேரடிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அந்நிறுவனத்தை அரசுத் துறையாக மாற்றியுள்ளார். USAID இடதுசாரி சித்தாந்தவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, தங்கள் சொந்த விருப்பங்களைத் திருப்திப்படுத்துவதற்காக பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க அபிலாஷைகள் புறந்தள்ளப்படுவதாக டிரம்ப் வருத்தம் தெரிவிக்கின்றார்.

ஆயிரமாண்டுகளைத் தாண்டி இன்றைய இந்தியாவுக்கு வாருங்கள், ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன? என்ற கேள்வியை எழுப்புங்கள். பாஜக இது ஒரு நான்-ஸ்டேட் அமைப்பு என்று கூறும், நிஜத்தில், உலகின் மிகப்பெரிய அரசு சாராத நிறுவனம் இதுவே. காங்கிரஸைக் கேளுங்கள், அவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஐ பாஜகவின் டீப் ஸ்டேட் என்று கூறுவார்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் உபயத்தில் சோனியா காந்தியின் NAC (தேசிய ஆலோசனைக் குழு) பங்களிப்பு என்ன என்று நீங்கள் பாஜகவிடமோ அல்லது காங்கிரஸிடமோ கேட்டால் இதே போன்ற பதில் தான் வரும். ஒரு ஷேலோ ஸ்டேட் அதன் எதிர்ப்பாளரின் டீப் ஸ்டேட் ஆகவும் மற்றொருவரின் நான்-ஸ்டேட் ஆகவும் அமைகின்றது.

தொடர்புடைய கட்டுரைகள்