கடந்த ஓராண்டாக, ‘நேஷனல் இன்ட்ரஸ்ட்’ இரண்டுகட்டுரைகளில், ‘டிரம்ப்பிற்கு நன்றி’ என்ற தலைப்பு இடம்பெற்றிருந்தது. ஏனெனில், அவரது மிரட்டல்களும் அவமானங்களும்தான் அமைதி காத்த இந்தியாவை உலுக்கி, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவும், பாதுகாப்பில் முதலீடு செய்யவும், சித்தாந்த ரீதியான வர்த்தக வெறுப்பைக் கைவிடவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) ஏற்கவும் தூண்டின. தற்போதைய நிலைமை மிகவும் சிக்கலானது.
நான் ‘டிரம்ப்பிற்கு நன்றி’ என்று கூறினால், அதனுடன் நெதன்யாஹூவையும், நிச்சயமாக ஈரானைச் சேர்ந்த ஒருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் ஈரானில் யாருக்கு நன்றி சொல்வது? ஆயத்துல்லா காமேனி முதல் அலி லாரிஜானி வரை — நன்றி சொல்லத் தகுந்தவர்களாக ஒரு காலத்தில் கருதப்பட்டவர்கள் அனைவரும் இப்போது இல்லை. மொஜ்தபா காமேனி எங்கே இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பதே நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ஈரானைச் சேர்ந்த யாரையேனும் அத்தகைய உயரிய பீடத்தில் அமர்த்துவதற்கு முன், நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பீர்கள். ஏனெனில், படுகொலைகள் மலிந்துள்ள இக்காலத்தில், நாளை யாருக்கு என்ன நேருமென்று யாரால் கணிக்க முடியும்?
ஆனால், இந்தியாவில் உள்ள நாம், இந்தப் போரைத் தொடங்கியதற்காக, போரிடும் மூன்று தரப்பினருக்கும் ஏன் நன்றி சொல்ல வேண்டும்? போர் என்பது எங்குமே ஒரு மோசமான விஷயம், குறிப்பாக அது நமது பிராந்தியத்திற்கு மிக அருகில் நடக்கும் போதும், நமது எரிசக்தி ஆதாரத்தை நெரிக்கும்போதும். மேலும், வளைகுடாப் பகுதியில் 9 முதல் 10 மில்லியன் இந்தியத் தொழிலாளர்கள், பெரிய பரஸ்பர முதலீடுகள், மற்றும் மூன்று தசாப்தங்களாகக் கட்டமைக்கப்பட்டு வரும் மூலோபாயக் கூட்டாண்மைகளும் உள்ளன. அவர்களுக்கு நன்றி சொல்வதற்குப் பதிலாக, இந்தப் போரில் ஈடுபட்டவர்களை, குறிப்பாக பிப்ரவரி 28 அன்று போரைத் தொடங்கியவர்களை நாம் சபிக்க வேண்டாமா?
நிலைமை அதைவிட மிகவும் சிக்கலானது. இதை உள்நாட்டில் நடக்கும் கட்சி சார்பு விவாதங்கள் மூலம் பார்க்கலாம். பாஜக/மோடி அரசாங்கத்தில் உள்ளவர்கள், இந்தப் போர் மீண்டெழும் இந்தியாவின் முதிர்ச்சிப் பருவம் என்று நம்மை நம்ப வைக்க முயல்கிறார்கள். அரசாங்கம் தனது காய்களை மிகத் திறமையாக நகர்த்தி, ஈரானுடனான சமநிலையைப் பேணிக்கொண்டு அரபு நாடுகளுடனான தனது நட்பை வலுப்படுத்தியுள்ளது என்றும், நமது முறையான மூலோபாயக் கூட்டாளிகளான அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைக் கலைப்பதை இரகசியமாகக் கொண்டாடுகிறது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். சொல்லப்போனால், மத்திய கிழக்கில் இந்தியாவுக்கு இப்போது ஏழு முறையான மூலோபாயக் கூட்டாண்மைகள் உள்ளன: ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து, கத்தார், ஓமன், குவைத் மற்றும் இஸ்ரேல். அவர்கள் அனைவரும் இப்போது ஒரே பக்கத்தில் போரிடுபவர்கள், எனவே இந்தியாவின் தேர்வுகள் எளிமையானவை. மேலும், ஈரானால் இந்தியாவைக் கைவிட முடியுமா? அதனால்தான் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு எண்ணெய்க் கப்பலும் ஒரு மாபெரும் தந்திரமாகப் பாராட்டப்படுகிறது.
ஈரான் மீதான தாக்குதல்களையோ, அல்லது குறைந்தபட்சம் போரையோ பொதுவாகக் கண்டிக்கத் தவறியதன் மூலம் இந்தியா தனது மூலோபாய சுயாட்சியை இழந்துவிட்டது என்று விமர்சகர்கள் கூறுவார்கள். இந்த விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தனக்குப் பழக்கமான ‘இது போர்க்காலம் அல்ல’ என்ற கொள்கையைக்கூடப் பயன்படுத்தவில்லை; இந்தியா அமெரிக்காவையும் இஸ்ரேலையும் மிகவும் சார்ந்திருக்கும் நிலைக்கு வந்து, தனது நடுநிலைமையைக் கைவிட்டுவிட்டது என்றும் அவர்கள் கூறுவார்கள். ‘பழைய மற்றும் விசுவாசமான நண்பனான’ ஈரானுக்கு இந்தியா எப்படி இவ்வளவு நன்றி இல்லாமல் இருக்க முடியும்? ‘ஆபரேஷன் சிந்தூர்’ குற்றச்சாட்டுகள் மற்றும் சுங்கவரி விதிப்பு அவமானங்கள் தொடர்பாக டிரம்பை எதிர்த்துப் பதிலடி கொடுக்க இந்தியா தவறிவிட்டது. மேலும், இஸ்ரேல் மீதான இந்த மிகைப்படுத்தப்பட்ட பற்றுதலுக்கு பாஜகவின் இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இருப்பினும், அந்த கடைசி விஷயம் சிக்கலானது. பாஜக முஸ்லிம்களை ஆதரிப்பதாக அறியப்படவில்லை என்றாலும், உண்மை என்னவென்றால், பெரும்பாலான முஸ்லிம் உலகம் ஈரானை எதிர்க்கும் கூட்டணியில் தான் உள்ளது. வளைகுடா அரேபியர்கள் முஸ்லிம்கள் இல்லையா? மேலும், வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (GCC-Gulf Cooperation Council) உறுப்பினர்களான துருக்கி மற்றும் அஜர்பைஜான் மீதான ஈரான் தாக்குதல்களைக் கண்டித்து ரியாத்தில் மார்ச் 18 அன்று வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், பாகிஸ்தானும் இணைந்துகொண்டது. இது ஈரானில் உள்ள முஸ்லிம் மக்கள்தொகையை விட சுமார் ஐந்து மடங்கு அதிகம். எனவே, மோடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மதரீதியாக, அதாவது யூதர் vs முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க விரும்பினால், அதற்கான பதில் ‘பாஹ்’ (BAH) என்பதுதான்.
சவூதி அரேபியாவுக்கான தனது பாதுகாப்பு உறுதிப்பாட்டிற்கும், ‘சகோதர’ நாடான ஈரானுக்கு ஆதரவளிப்பதாகப் பாசாங்கு செய்வதற்கும் இடையில் பாகிஸ்தான் தத்தளிக்கும் வேளையில், இந்தக் கொந்தளிப்பான சூழலில் இந்தியா எவ்வளவு அழகாக நிலைபெற்றுள்ளது என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஹோர்முஸ் நதியைக் கடக்கும் அந்த எண்ணெய்க் கப்பல்களையும், கொச்சியில் பாதுகாப்பாகத் தங்கியிருக்கும் ஒரு ஈரானியக் கடற்படைக் கப்பலையும், மோடிக்கும் வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கும் இடையே நடக்கும் அந்த ஏராளமான தொலைபேசி உரையாடல்களையும் பாருங்கள்—ஈரானிய அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடனான உரையாடலும் இதில் அடங்கும். இந்தியாவும் இஸ்ரேலும் ஒரு முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இந்தச் சூழலில், மேலும், டிரம்ப் ஒரு மாதமாக நம்மைப் பற்றி ஒரு மோசமான வார்த்தைகூடப் பேசவில்லை. இதுதான் இந்தியா தனது உண்மையான ‘விராட் விஸ்வகுரு‘ அவதாரத்தில் எழுவதைக் காட்டுகிறது.
எனினும், நாம் இதனை மேலும் சுருக்கி, ஒன்றுக்கொன்று முரணான இரண்டு எளிய வாத முடிவுகளுக்கு வரலாம். மேலே பட்டியலிடப்பட்ட அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொள்ளும்போது, மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தனது உண்மையான வலிமைக்கு அப்பாற்பட்ட, மிக உயர்ந்த நிலையில் செயல்பட்டு வருவதாக ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மறுதரப்பினரோ, காந்திய மற்றும் நேருவிய நெறிசார் அதிகாரத்தால் மெருகூட்டப்பட்ட இந்தியாவின் பாரம்பரிய பலங்களை மோடி சிதைத்துவிட்டதாகக் கருதுகின்றனர். கடந்த காலத்தில் நாம் எத்துணை தீவிரமாக மதிக்கப்பட்டோம் என்பதை எண்ணிப் பாருங்கள்; அந்த மதிப்பானது, இந்தியாவின் ‘மூலோபாயச் சுயாட்சி’யுடன் (strategic autonomy) சேர்த்தே இப்போது முற்றிலுமாக மறைந்துவிட்டது. எனவே, இந்தியா தனது உண்மையான வலிமைக்கு மிகவும் குறைவான நிலையிலேயே செயல்பட்டு வருகிறது.
இரண்டுமே தவறானவை. மேலும், அவை வெறும் மாயத்தோற்றங்களே. தனது சுதந்திர வரலாற்றின் நெடுகிலும்—அன்றைய காங்கிரஸ் ஆட்சிக்காலமாகட்டும் அல்லது இன்றைய மோடி ஆட்சிக்காலமாகட்டும்—இந்தியா தனது உண்மையான வலிமைக்கு ஏற்ற வகையிலேயே செயல்பட்டு வந்துள்ளது. இருப்பினும், தனது சொந்த வல்லமை மற்றும் அதிகாரத்தைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட உணர்வை அது எப்போதும் கொண்டிருந்திருக்கிறது—கடந்த காலத்தில் அது பெரும்பாலும் தார்மீக, தத்துவ மற்றும் சித்தாந்த ரீதியிலானதாக இருந்தது; இக்காலத்திலோ அது பெரும்பாலும் உத்திசார், பொருளாதார மற்றும் ஆன்மீக ரீதியிலானதாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகளாவிய அதிகாரத்தின் மீதான இந்த மிகைப்படுத்தப்பட்ட உணர்வு, ஒரு தலைவரை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டது. அன்று நேருவும் இந்திராவும்; இன்று மோடி. இந்தியாவை ‘விஸ்வகுரு‘வாக (உலகிற்கே வழிகாட்டியாக) முன்னிறுத்தும் தங்கள் கருத்தாக்கத்திற்காக, பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ஸும் தொடர்ந்து எதிர்மறையான ஊடக விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றன.
நேரு-இந்திரா காலகட்டத்திலும் இதே மனப்பான்மையே மேலோங்கி இருந்தது. உலகத்திற்கு அறிவுரை கூறுவதே நமது தேசியப் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. தனிநபர் வருமானம் 92 டாலராக (1962) இருந்தபோதோ அல்லது தற்போது சுமார் 3,000 டாலராக இருக்கும்போதோ — நாம் இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம். அவர்கள் இதைப் பல்வேறு சொற்களால் வர்ணிக்கக்கூடும்; ஆயினும், ஒரு ‘விஸ்வகுருவாக’ (உலக வழிகாட்டியாக)த் திகழ்வது என்பது இந்தியாவில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட — சொல்லப்போனால், ஒரு மதச்சார்பற்ற — கற்பனையாகவே இருந்து வருகிறது.
ஒரு தேசத்தின் வலிமையைத் தீர்மானிப்பதில் சுய பிம்பம் ஒரு முக்கியக் காரணியாகும், ஆனால் மற்ற பல காரணிகளும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். கடந்த காலத்தில், நாம் பொருளாதார ரீதியாக பலவீனமாகவும், இராணுவ ரீதியாக அச்சுறுத்தப்பட்டும், சோவியத் ஒன்றியத்துடன் வியூக ரீதியாக அணிசேர்ந்தும் (சமரசத்திற்குட்பட்ட வியூக சுயாட்சியுடன்) இருந்தோம்; மேலும் நீண்ட காலமாக உணவு உதவியும் தேவைப்பட்டது. 1956-ல் ஹங்கேரி, 1968-ல் செக்கோஸ்லோவாக்கியா, 1978-ல் கம்போடியா மற்றும் 1979-ல் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் சோவியத்தின் நடவடிக்கைகள் குறித்து நாம் அமைதியாக இருந்திருந்தால், நமக்கு எவ்வளவு குறைவான வியூக சுயாட்சி இருந்தது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும், 1971-ல் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஹென்றி கிஸ்ஸிங்கரை நம்மால் எதிர்த்து நிற்க முடிந்தது. அது, நமது சோவியத் கூட்டணி மற்றும் பசுமைப் புரட்சியின் மூலம் நாம் கட்டமைத்திருந்த வியூகச் செல்வாக்கை வெளிப்படுத்தியது. மொத்தத்தில், நமது வலிமைக்கு ஏற்றாற்போல் நாம் செயல்பட்டோம்.
இன்று, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில், நமது தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் $3,000 மட்டுமே உள்ளது; இது நடுத்தர வருமான நிலைக்கு மிகவும் குறைவாகும். இந்நிலையில், ரஷ்யாவுடன் வலுவான உறவையும், சீனாவுடன் ஸ்திரத்தன்மையையும் பேணிக்கொண்டே, அமெரிக்காவுடன் மிக முக்கியமான ஒரு கூட்டாண்மையை நம்மால் உருவாக்க முடியும். ஐரோப்பா, பிரிட்டன், கனடா மற்றும் பல நடுத்தர சக்திகள் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவதில் மதிப்பைக் காண்கின்றன. இஸ்ரேல் ஒரு முக்கிய உத்திசார் கூட்டாளியாகவும், அரேபியர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் உள்ளனர். இந்தியா, I2U2 (இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா) அமைப்பில் உள்ள ‘I’-களில் ஒன்றாகும். அதே நேரத்தில், ஈரானுடன் குறைந்தபட்சம் குடிமை உறவுகளையாவது பேணுகிறது.
உலகம் முழுவதும் சார்புநிலைகளைக் கொண்ட ஒரு நடுத்தர சக்தியின் செவ்வியல் வரம்புகளே இவை. பாதுகாப்புக்கு அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ்; எரிசக்திக்கு ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகள்; மலிவான பொறியியல் மற்றும் மின்னணுவியல் பொருட்களுக்கு சீனா; உரங்கள் மற்றும் பருப்பு வகைகளுக்கு உலகின் பல நாடுகள்; வேலைவாய்ப்புக்கு வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா. இந்தச் சார்புநிலைகள், இந்தியாவின் புதிய சக்தி குறித்த மிதமிஞ்சிய எண்ணங்களைத் தணித்துவிட வேண்டும். இதனால்தான், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவையும், ஈரான் விவகாரத்தில் அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணியையும், ஏன், பல நாடுகளில் உள்ள தீவிரவாத/பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் ஈரானையும் கூட இந்தியாவால் கண்டிக்க முடியவில்லை. இதனால்தான், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) விஷயத்தில் சீனாவுடன் ஒரு கடினமான இணக்கமுறையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு நாட்டையும் போலவே, இந்தியாவும் தனது சக்தி மற்றும் அன்றைய தேவைகளுக்கு ஏற்பவே முடிவுகளை எடுக்கிறது. அந்த வரையறைக்குள், இந்தியா தனது முடிவுகளை எடுத்து, தனது சக்திக்கு ஏற்றாற்போல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. நிச்சயமாக, இந்த நெருக்கடி நம்மைப் பாதுகாப்பு உற்பத்தி, எரிசக்தி ஆய்வு மற்றும் உரச் சீர்திருத்தம் ஆகியவற்றை நோக்கி இன்னும் கடுமையாக உந்தினால், நாம் மீண்டும் ஒருமுறை சொல்வோம்: டிரம்ப், நெதன்யாகு மற்றும் ஈரான் தரப்பில் பெயர் குறிப்பிட விரும்பாத வேறு ஒருவருக்கு நன்றி.
(மொழிபெயர்த்தவர் சுபத்ரா)
