scorecardresearch
Tuesday, 16 September, 2025
முகப்புதேச நலன்ஏய்ப்பா ஏமாற்றலா: இந்திய இராணுவ பற்றாக்குறைகளுக்குப் பின்னால் இருக்கும் பெரும் மோசடி, இந்தக் கட்டுரை போலவே!

ஏய்ப்பா ஏமாற்றலா: இந்திய இராணுவ பற்றாக்குறைகளுக்குப் பின்னால் இருக்கும் பெரும் மோசடி, இந்தக் கட்டுரை போலவே!

போஃபர்ஸ் தொடங்கி ராஜீவ் காந்தியை குறைசொல்வது வாடிக்கையான ஒரு விஷயம், வரலாற்று ரீதியில் 1985-89 காலகட்டம் மாத்திரமே இந்திய ஆயுதக்கொள்வனவுகள் எதிர்காலச் சிந்தனையுடன் விவேகமாக நிகழ்ந்தன என்பதே உண்மை.

இந்தக்கட்டுரை ஒரு உத்தரவாத வேண்டுகோளுடன் தொடங்குகின்றது. பக்கத்தின் இறுதியில் ஒரு சுவாரசியம் இருக்கின்றது, நிதானமாக படியுங்கள்.

நிதர்சணத்தை அப்பட்டமாக கூறக்கூடிய மூத்த தளபதியை இந்தியா வெகுகாலத்துக்குப் பின் இப்போது தான் பெற்றிருக்கின்றது. பிரதான வான் தளவாய் (ஏர் சீப் மார்ஷல்) A.P. சிங், எதிரிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய வான்படையின் எண்ணிக்கை மற்றும் தொழிநுட்ப குறைபாட்டு இடைவெளி பற்றிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வானியல் தளவாடங்களை தயாரித்து வழங்கும்  இந்திய ஏகபோக பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடடின் (HAL) கேமராக்கள், மைக்ரோஃபோன்களின் செயற்பாடுகளையும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றார். புதிதாக பதவியேற்கும் ராணுவத்தலைவர்களின் வழமையான, “எங்களிடமிருப்பதைக் கொண்டு எதிர்ப்போம்” என்ற வெற்றுவார்த்தைகளையே கேட்டுப் பழகிய எமக்கு இது புத்துணர்ச்சியளிக்கின்றது. 

வான்படை தளவாயின் குரலுக்கான எதிர்ப்புக்கள் ஆச்சரியமூட்டுவன அல்ல. ஆயுதப்படையணிகளில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுபவர் அனைவருமே இறக்குமதி வெறியர்கள், அல்லது கைக்கூலிகள் என்று குற்றம் சாட்டப்படுகிறனர். ஒரு முறைசாரா கும்பல் இந்தியவை வளர்ச்சி அடையவிடாமல், அநாவசியமான, விலையுயர்ந்த இறக்குமதிகளில் தங்கியிருக்க மட்டுப்படுத்தி வைத்திருக்கின்றது. பாதுகாப்பும் “செல்வாக்கு” மிக்கவர்களின் விருப்புக்கேற்ப இயங்கும் நிலையிலிருப்பது அறிந்து, போர்த்தளபதிகளுக்கும் எச்சரிக்கையாகவே இருக்கின்றனர். போதாக்குறைக்கு டொனால்ட் டிரம்ப் F35 என்று, எரியும் தீயில் எண்ணை வார்த்திருக்கின்றார்.

ஊடுருவிப்படர்ந்துள்ள இந்த அச்சம், பாதுகாப்பு உபகரண கொள்வனவுகளை சாத்தியமற்றதாக்குகின்றது. இந்தியாவில் ஆயுத உற்பத்தி மிகக்குறைவாகவே இருக்கின்றது, மேலும் அவை இணைச்செயற்பாடுகளால் உருவாக்கப் படுகின்றன. “சுதேசமயமாக்கல்” (இந்தியமயப்படுத்தல் என்று ஏன் அழைக்கக்கூடாது?) என்று நாம் பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்தக் கேள்வியை கேட்டுப்பாருங்கள்: 200க்கும் மேற்பட்ட சுகோய் 30-MKI களையும், எண்ணற்ற ஜாகுவார் மற்றும் MiG விமானங்களையும் இணைந்து தயாரித்த பின்னரும், எம்மால் சுயாதீனமாக ஒரு படைக்கல விமானத்தை எப்போதேனும் தயாரிக்க முடிந்ததா? நம்மால் சீனர்களைப்போல் பிரித்தெடுப்பாய்வு மூலம் மீளுருவாக்கம் செய்யவும் இயலவில்லை என்பதை காணுங்கள். 

தில்லியில் ஸ்தம்பித்திருந்த நிலைப்படுகளையும், அவதூறான கருத்துக்களையும், ஒருவரை ஒருவர் சாடிக்கொள்ளும் தந்திரங்களையும் தகர்த்து, 36 ரஃபேல் விமானங்களை கொள்வனவு செய்தது ஒரு துணிச்சலான முனைப்பு என்று கருதவேண்டியுள்ளது. ‘இந்தியா எவ்வாறு இப்படியான ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது?’ என்ற எதிர்வாதத்தின் நியாயத்தையும் ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. விளைவு, போர்க்கால துரிதத்தில், இத்தனை வேகமாக 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆயுதங்களை நேரடி கொள்வனவு செய்யவேண்டிய அவசியமேற்பட்டுவிட்டது. ‘மிதமிஞ்சிய ஆயுத இறக்குமதியாளர்’ என்ற கூற்று, நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட தன்னிகழ்ச்சிக் களங்கம்; இது இந்திய அமைப்பின் சாபக்கேடு. 

சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமை அமைவிடமாகக் கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI), 1990 ஆம் ஆண்டில் டாலரின் மதிப்பை ஆதாரமாகக் கொண்டு உலகலாவிய இறக்குமதியை மதிப்பீடு செய்கின்றது. இந்தியா 2015-24 க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 23.7 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள ஆயுத இறக்குமதியை செய்துள்ளதாக குறிப்பிடுகின்றது (இது உலகலாவிய ஆயுத இறக்குமதியின் 9.8 சதவீதமாகும்). சராசரியாக, இந்தியா வருடத்திற்கு $2.3 பில்லியன் ஆயுத இறக்குமதியை செய்கின்றது. 

இங்கு கவனிக்கவேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன. முதலாவது, நரேந்திர மோடி ரஃபேல், அப்பாச்சி, எம்-777 மௌண்டன் ஹோவிட்சர்கள், ஹார்பூன் ஏவுகணைகள், எம்எச்-60 ரோமியோ கடற்படை உலங்குவானூர்திகள் (ஹெலிகாப்டர்கள்), எம்க்யூ-9பி ட்ரோன்கள் போன்றவற்றுக்கான நேரடிக் கொள்வனவு ஆணை, ஒரு கைதேர்ந்த மருத்துவர் பலவீனமடைந்துகொண்டிருக்கும் நோயாளியைக் காப்பாற்றவேண்டிய அவசியத்தில் பல ஆபத்தான அறுவைச்சிகிச்சைகளை மேற்கொண்டதுபோல, விவேகமும் தைரியமும் கொண்டதாக இருந்தது. இரண்டாவது விடயம் ஒரு கேள்வியாக அமைகின்றது. எப்போதும் சிகிச்சை அவசியமிருக்கும் இரண்டு பதட்டமான எல்லைகளைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய இராணுவ இயந்திரம், நிரந்தரமாக எவ்வாறு தீவிர சிகிச்சைப்பிரிவிலேயே (ICU) தங்கிவிட்டது?

அல்லது, கட்டுரையாளரை அசௌகரியப்படுத்தும் விதத்தில் இதே கேள்வியை இவ்வாறும் கேட்கலாம்: மதிப்பிற்குரிய எழுத்தாசிரியரே, உங்கள் எண்ணங்களை சோதித்துக்கொள்ளுங்கள். எப்போதும் எதிரிகளின் ஊடுறுவலை எண்ணி அவதிப்படும் ஒரு நாடு, தேசிய  பாதுகாப்பிற்காக ஆயுதக் கொள்வனவு செய்வதை தவறாக சித்தரிப்பது நியாயமாகுமா? பின்னர், அந்நாட்டிடம் போதிய நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையை பழிக்க முடியும்?

இந்தியாவின் பாதுகாப்புத் திட்டமிடலின் முரண்பாடுகளை பிரதிபலிக்கும் இக்கேள்விகள் முற்றிலும் நியாயமானவை, சன்மானம் பெறத்தகுதியுடைய கேள்விகள்.  மறைந்த ஸ்டீபன் பி கோஹனும் சுனில் தாஸ் குப்தாவும் (மூன்று தசாப்தங்களுக்கு இந்தியா டுடேயில் இன்னுடன் இணைந்து பணியாற்றியவர், பாதுகாப்பு நிலவரங்களை ஆவனப்படுத்த கற்றுக்கொண்டிருக்கையில்) இணைந்து எழுதிய “ஆர்மிங் வித்தவுட் எய்மிங்” (இலக்கின்றி ஆயுதம் ஏந்துவது) எனக்கு விருப்பமான புத்தகம். இப்புத்தகம் இந்தியாவின் சிந்தனை மற்றும் திட்டமிடல் சாமர்த்தியம் அற்ற அவலத்தைப் பற்றி புலம்புகின்றது.

அவர்கள் சுட்டிக்காட்டுவது போல், இந்திய சித்தாந்தங்கள் எப்போதும் சூழ்நிலைகளுக்கேற்றவாறு தொகுக்கபடுகின்றன, அவை தொடர்ச்சியற்றவை, சிக்கலானவை. இந்த கருதுகோள் பற்றிய என் உள்ளுணர்வுகள் என்னுடைய தனிப்பட்ட சிறு ஆவணத் தொகுப்புகளினுள் மௌனமாக இருக்கின்றது. அது, ஜஸ்வந்த் சிங் சகஜமாக ஒரு காகிதத் துண்டில் பென்சிலால் எழுதிய குறிப்பு. 1994 கோடைக்கூட்டத் தொடரில், ஜெனரல் சுந்தர்ஜி, இந்தியாவின் மூலோபாயக்கோட்பாடுகளில் இருக்கும் குறைபாடுகளை எடுத்துரைத்த, சால்ஸ்பர்க் திட்டமிடல் விவகார கருத்துரை அமர்வில், ஜஸ்வந்த் சிங் ஒரு புன்னகையுடன் இதனை இன் கையில் திணித்தார். “நான் இராணுவ வியூக கோட்பாடுகளை பரிசீலனை செய்த பாராளுமன்ற கூட்ட அமர்வை தலைமை தாங்கினேன்,” என்று அதில் அவர் எழுதியிருந்தார். மேலும், “நம்மிடம் வியூகங்களும் இல்லை, கோட்பாடுகளும் இல்லை என்ற முடிவுடன் கூட்டம் நிறைவுற்றது.”

இந்த நிலையில் எந்த மாற்றமும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால், நாம் இப்போதும் இத்தனை அவசரமாக, சூப்பர்மார்கெட்டில் மளிகைப்பொருள் வாங்குவது போலவோ அல்லது ஹாம்லீசில் பொம்மைகள் வாங்குவது போலவோ போர்விமானங்களை கொள்வனவு செய்யவேண்டிய அவசியமேற்பட்டிருக்காது. ஒரேசமயத்தில் நூற்றுக்கும் அதிகமாக ‘ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை’ வாங்கவேண்டிய அவசியமோ, அல்லது 60,000 க்கும் அதிகமான தொகுதிகளாக காலாட்படைக்கான இலகுரக துப்பாகிகளை வாங்கவேண்டிய அவசியமோ ஏற்பட்டிருக்காது. பாதுகாப்பு ஆயுதக் கொள்வனவு வரலாற்றில் அனைத்து ஆயுதக் கொள்வனவுகளும் இப்படியே நடைபெற்றிருக்கின்றது, ராஜீவ் காந்தியின் 1985-89 கால கொள்வனவுகள் மாத்திரமே இதற்கு விதிவிலக்கு. ஆனால், அக்கொள்வனவு போஃபர்ஸ் எனும் கிருமியை விட்டுச் சென்றிருக்கின்றது. 

அச்சம், அபாயகரமான சிக்கனத்திற்கு வழிவகுக்கின்றது. பாலகோட் சம்பவத்தின் பின் MiG 21 பைசன் விமானங்கள் F-16 விமான வரிசையில் இனைக்கப்பட்டது எவ்வாறு? இரண்டு MiG ரக விமானங்களும் Mi-17 ரக தாக்குதல் உலங்குவானூர்தியையும் இழந்ததுடன், போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட ஒருவரைத்தவிர அதன் படைவீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, கார்கில் போரில் இந்திய விமானப்படைக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் நினைவிருக்கின்றதா? நான்காவதாக, ஓய்வு பெற்ற, புலங்காண்டல் விமானமான ‘கான்பெரா,’ தேர்ந்த குழுவினரால் தயார்படுத்தப்பட்டு, குறைபாடுடைய இயந்திரத்துடன் மீண்டும் பணிக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. நான்கு விமானங்களும், இலகுரக தோற்காவு ஏவுகணைகளால் தாக்கியழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை சுதாரித்த உடனேயே, இஸ்ரேலிலிருந்து தன் இரவில் பயன்படுத்தப்படும் மிகவுயப் பறக்கும் ‘மிராஜ்’ ரக விமானங்களுக்காக லேசர் கதிர்வீச்சு கருவிகளை கொள்வனவு செய்ததுடன், களநிலவரம் மாறியது. 

“எல்லாம் சரியாக இருக்கும்” (“சல்தா ஹை”) என்ற எமது குறுகிய எண்ணத்தை துதிபாடும் அர்த்தமல்ல. அமெரிக்க புதின எழுத்தாளார் எரிக்கா ஜாங்கிடம்  மன்னிப்பு கோரிக்கொண்டே இந்த மட்டுப்படுத்தப்பட்ட கேள்வியை ஆராய்வதற்காக கேட்கின்றேன்: வாங்குவதற்கு ஏனிந்த அச்சம்? 1987 முதல், போஃர்பஸ் தாக்கக் கோளாறு ஒரு காரணமாக இருந்து வருகின்றது. “ஒவ்வொரு இராணுவ கொள்வனவும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றது, தாமதப்படுத்தப்படுகின்றது அல்லது அநாவசிய பரபரப்பை ஏற்படுத்துகின்றது” இவ்வாறுதான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முடிவில்லாச் சுழலுக்குள் முக்கிய கோப்புக்கள் திணிக்கப்படுவது பற்றி கருதுகின்றார். இந்த துர்பாக்கிய நிலை ஆயுதவியாபாரிகளுக்கும், இடைத்தரகர்களுக்கும், அதனிலும் மேம்பட்ட புதிய தோற்றப்பாடான B2B (வியாபாரியிடமிருந்து வியாபாரிக்கு என்ற பரிணாமம்) ஆயுத சந்தை ஊடகங்களுக்கும் புது தில்லியை இரையாக்கியுள்ளது. 

ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள், மாறிவரும் தேவைகள் மற்றும் தீய ஆயுத வர்த்தகத்தால் இந்த அமைப்பு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்ற கவலைகள் குறித்த குழப்பத்தில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். ஆனால் இதனுடன், வேறு எந்த நாட்டையும் விட நாம் அதிகமாக இறக்குமதி செய்கிறோம் என்பதும் ஒரு உண்மை. நீங்கள் முரண்பாட்டைப் பார்க்க விரும்பினால், 1991 முதல் மிகவும் அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஆபத்து-தயக்க பாதுகாப்பு அமைச்சராக இருந்து வரும்  ஏ.கே. ஆண்டனியைப் பாருங்கள், ஆனால் சுதந்திர இந்தியாவில் அமெரிக்காவிலிருந்து C-130, C-17, P-8I விமானங்கள் உட்பட அதிக எண்ணிக்கையிலான அரசாங்க அளவிலான கொள்முதல்களைச் செய்தவர். இப்போது மோடியும் அதே அபாயமற்ற, அவசரகால கொள்முதல் வழக்கத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளார். 

அச்சங்களைய அதை எதிர்கொள்வதே சிறந்த வழி. போஃபர்ஸை காரணம் காட்டி ராஜீவ் காந்தியை குறை சொல்வது வழக்கமாகிவிட்ட ஒரு விடயம். உண்மையில், எம் வரலாற்றில் 1985-89 காலகட்டத்தில் மட்டுமே ஆயுதக் கொள்வனவுகள் முன்னேற்பாட்டுடன், தொலைநோக்குடன், எமது இரணுவ பாதுகாப்பு வியூகக் கோட்பாடுகளை மறுவரை செய்தது. ஜெனரல் சுந்தர்ஜியின் ‘பிராஸ் ஸ்டாக்ஸ்’ (ராஜஸ்தான் பிரதேசத்தில், பஞ்சாப்புக்கு அருகில்) மற்றும் ‘செக்கர்போர்டு’ (இந்திய சீன எல்லைப்பகுதியில்) பயிற்சிகள் எதிரிகளின் வலயத்தினுள் போர்புரிவதற்கான ஆயத்தமளித்தது. இன்றும், முப்படைகளாலும் பயன்படுத்தப்படும் மிராஜ் ரக விமானங்களாகட்டும், T-72 பீரங்கிகளோ, புதிய வகை MiG தாக்குதல் விமானங்கள், மற்றும் BMP கவச வாகனங்கள் மற்றும் போஃபோர்ஸ் ஆர்டிலரி உட்பட, பெரும்பாலான இராணுவ உபகரனங்கள் ராஜீவ் காந்தியால் வாங்கப்பட்டவையே. அவ்வாண்டுகளில் இந்திய இராணுவ பாதுகாப்பு நிதிச்செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 4 சதவீதம் என்ற மரபுரீதியான ‘லட்சுமண கோட்டை’ தாண்டியிருந்தது.

இவ்வச்சம் எப்படி சுயதோல்விக்கு வழிவகுக்கின்றதென்பதை தரவுகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். நம் நாட்டின் 10 வருட இராணுவ பாதுகாப்பிற்கான ஆயுத இறக்குமதி சராசரி வருட தங்க இறக்குமதியில் பாதியை விட குறைவாகும்; ரிலையன்ஸ் நிறுவனங்களின் இறக்குமதி செலவின் 5 சதவீதத்திற்கும் குறைவாகவும், பொதுத்துறை நிறுவனமான இந்திய எண்ணை கூட்டுத்தாபனத்தின் (இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் -IOC) இறக்குமதியில் தோராயமாக 8 சதவீதமாகவும் இருக்கின்றது. எமது வருடாந்திர இராணுவ இறக்குமதி செலவு சராசரியாக $2.3 பில்லியன்களாக கொள்ளப்படுகின்றது; இந்தத் தொகை, எமது பசளை அல்லது உரக் கொள்வனவுச் செலவின் நான்கில் ஒரு பகுதியிலும் குறைவாகவே இருக்கின்றது. எனது கேள்வி இதுதான். வீரர்களுக்கு வாங்குவதில் ஊழலும் விவசாயிகளுக்கு வாங்குவதில் ஒழுக்கமும் எப்படிச் சாத்தியமாகும்?

சர்ச்சைகள் எழுவது பாதுகாப்பு இறக்குமதிகள் பெரியதாக இருப்பதனால் அல்ல, மாறாக, அவை சிறியதாகவும் துண்டங்களாகவும், அதிக இடத்தரகர்கள், விற்பனையாளர்களுடன் நமது நிர்வாக ‘அமைப்பும்’ இந்த பயத்தை தூண்டிவிடுகின்றது. இந்தப் பயத்தை நாம் வெல்லவில்லை என்றால், அவசர சிகிச்சைக்கு ஆட்பட்டுக்கொண்டே இருப்போம். அறுவை சிகிச்சை ஏற்படாவிடினும், கூடிய விரைவில் அவசர இரத்தமாற்றம் தேவைப்படும்

பின்குறிப்பு: நான் ஆரம்பத்தில் உங்களிடம் எறிந்த புதிர் என்னவென்றால், ஏப்ரல் 27, 2015 அன்று ரஃபேல் சர்ச்சை குறித்து ஒரு கட்டுரையை எழுதியிருந்தேன். இப்போது இந்த வாரம் நீங்கள் மேலே படித்த கட்டுரை கிட்டத்தட்ட பழைய கட்டுரையையே தான், புள்ளிவிவரங்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன, குறிப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. விஷயங்கள் மாறினாலும் மாறாவிட்டாலும், உலகின் நான்காவது பெரிய இராணுவப் படையுடன் நகைச்சுவை தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்