டிரம்பின் வருகையும் டிரம்பிசத்தின் எழுச்சியும் இந்தியாவிற்கு பாதகமா? சாதகமா? வெள்ளை மாளிகையில் பிரவேசித்ததிலிருந்து, ‘நண்பரோ பகைவரோ, எல்லோரும் நம்மைக் கொள்ளையடித்துவிட்டார்கள்’ என்பதே அவரது ஒரே பாடல். அப்போதிருந்து, அவர் இடைவிடாமல் முதலில் நண்பர்களை குறிவைத்து வருகிறார். மூலோபாய மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் ஐரோப்பாவையும், கனடா, மெக்சிகோவையும், மேலும், வர்த்தகத்தில் “வரி ராஜா”வான இந்தியாவையும் குறிவைத்து வருகிறார்.
இதுதான் என்னுடைய பதிலாக இருக்கும்: வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், துப்பாக்கி முனையில் இந்தியாவும் டிரம்பின் கைகளில் துப்பாக்கியும் இருப்பது போன்றது. ஒரு விதத்தில் இது இந்தியாவிற்க்கு சாதாகமானது. பிதற்றுவது போல் தோன்றுகிறதா? என் வாதத்தை நான் எடுத்துரைக்க அனுமதியுங்கள்.
இது கணிசமான அளவுள்ள ஒவ்வொரு தேசிய அரசுக்கும் உண்மையாக இருப்பது போல, குறிப்பாக ஜனநாயக நாடுகளில், அரசியலும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைந்தே செல்கின்றன. சாதாரண நேரங்களில் அரசியல் தலைவர்கள் தேசிய பொருளாதாரத்தை நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் ‘சாதாரண காலம்’ அசாதாரண விளைவுகளுடம் இருக்கும்.
இந்தியா கணிசமான சீர்திருத்தங்களைச் செயல்படுத்திய இரண்டு தருணங்களிலும் அது துப்பாக்கி முனையில் இருந்தது. முதலாவது, நாணய சமநிலை நெருக்கடி (பெரும்பாலும் திவால்நிலை என்று தவறாகக் குறிப்பிடப்படுகிறது) மற்றும் 1991 இல் சர்வதேச நாணய நிதியதிற்கு செல்ல வேண்டிய அவசியம், பின்னர், 1998 இல் போக்ரான்-2 க்குப் பிறகு உலகளாவிய தடைகள்.
டிரம்ப் டிரிகரை அழுத்த போவதாக மிரட்டுவது மூன்றாவது முறையாக இருக்கும். தலைப்புச்செய்திகளில் கவனம் செலுத்தும் வெற்றுக் கற்பனைகளிலிருந்து விழித்து, தன்னைதானே சுயபரிசீலனை செய்து கொள்ள இது போதுமானதாகும்.
மக்கள் மனதை வெற்றிகொள்ள ‘வேகமாக வளரும் பெரிய பொருளாதாரம்’, ‘ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்தங்க வைக்கும், ஐந்தாவது பெரிய மற்றும் விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்,’ போன்ற வழக்கமான முழக்கமிடும் தலைப்புகளை பயன்படுத்துவது வாடிக்கையாக இருந்தாலும், பத்து வருடங்கள் கடந்தும் நிறைவேறாமல் நிற்கும் உற்பத்தி புரட்சி வாக்குறுதிகள், நிஜத்தில் பின்னோக்கிப் போயுள்ளதே நிதர்சணம். டிரம்ப் போதிய அழுத்தத்தை கொடுப்பாரா? சற்றே திரும்பிப் பார்த்தால், கற்றுக்கொள்ளலாம்.
1947 முதல் 1989 வரையிலான பொருளாதாரத்தை ஒரு கெட்ட கனவாகக் கருதி ஒதுக்கிவிடலாம். நெருக்கடிப் பிரகடணத்தின் பிந்தைய கால அவதாரத்தில் இந்திரா காந்தி கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கினார் என்றும், ராஜீவ் காந்தி அதைத் தொடர்ந்தார் என்றும் சில வரலாற்றாசிரியர்களும் பொருளாதார வல்லுநர்களும் வாதிடலாம்.
பழைய காங்கிரஸ் கட்சிக்காரரைத் தவிர வேறு யாரும் அவர்கள் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தொடங்கினர் என்ற கருத்தை நம்ப மாட்டார்கள்.
இந்தியாவின் முதலாவதும், பொருளாதார பரிணாம எழுச்சிக்கும் இந்திரா-ராஜீவ் தசாப்தத்திற்கு, ஏதேனும் கடன்பட்டிருந்தால் அது இந்தியாவிற்கு அதன் முதல் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்திய நாணய சமநிலை நெருக்கடிதான். 1997-98 (கௌடா-குஜ்ரால்) காலத்தில் நிதியமைச்சராக ப. சிதம்பரம் சில முக்கியமான மாற்றங்களைச் செய்தார். பெரும்பாலானவை ராவ்-மன்மோகன் சீர்திருத்தத்திற்கு ஏற்ப இருந்தன, பொதுத்துறை நிறுவனங்களைப் பங்குச் சந்தைப் பட்டியலிட்டதும், பூரண தனியார்மயமாக்கலுக்கும் கதவைத் திறந்த மிக முக்கியமான நடவடிக்கையும் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தது.
இது முடிந்ததும், இந்தியா தனது அடுத்த துப்பாக்கி முனை தருணத்திற்காகவும், 1998 இல் வாஜ்பாய் அரசாங்கத்தின் போக்ரான்-2 சோதனைகளுக்காகவும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐரோப்பா முதல் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா வரையிலான தடைகள் மற்றும் கண்டனங்களுக்காகவும் காத்திருக்க வேண்டியிருந்தது.
மறைந்த ஜஸ்வந்த் சிங் அமெரிக்கர்களுடன் தனது உரையாடலைத் தொடங்கியபோது (இரண்டையும் சரிபார்க்கவும், அவரது கணக்கையும் அமெரிக்க உரையாசிரியர் ஸ்ட்ரோப் டால்போட்டின் கணக்கையும் சரிபார்க்கவும்), சீனாவிற்கு நிகராக ஒரு பொறுப்பான அணுசக்தி சக்தியாக இந்தியா அமைவதும், இத்தகைய ஒரு பாரிய பொருளாதார விருத்தி உருவாகுவதற்கான ஒரு வாய்ப்பை அமெரிக்கா நழுவ விடுமா?
இது இரண்டாவது சீர்திருத்த அலைக்கு வழிவகுத்தது, இதில் லாபம் ஈட்டும் நிறுவனங்களை உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை பெரிய அளவில் தனியார்மயமாக்குவது அடங்கும். இன்று திரும்பிப் பார்க்கும்போது, எங்கள் தலைமுறையினர் வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்திருக்கின்றனர் என்ற உணர்வு ஏற்படுகின்றது. அப்போதிருந்து, ஏர் இந்தியாவைத் தவிர வேறு எதுவும் தனியார்மயமாக்கப் பட்டது இல்லை. பொக்ரான் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, அந்நிய நேரடி முதலீடு முதல் இறக்குமதி வரை சீர்திருத்தங்கள், இந்திய வணிகங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (LRS-Liberalised Remittance Scheme) கீழ் சாதாரண குடிமக்கள் ஒவ்வொரு நிதியாண்டிலும் $2.5 லட்சம் வெளிநாடுகளில் செலவிட அல்லது முதலீடு செய்ய சலுகை மற்றும் கட்டணக் குறைப்பு வரை பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தனது 1999 பட்ஜெட்டில் தனது கட்டணங்களை கிட்டத்தட்ட ASEAN நிலைகளுக்குக் கொண்டு வந்ததாகக் கூறினார். UPA தசாப்தத்தில், பொதுத்துறை நிறுவன தனியார்மயமாக்கலில் ஒரு தடையைத் தவிர, இந்த சீர்திருத்தங்கள் எதுவும் திரும்பப் பெறப்படவில்லை.
ராவ்-மன்மோகன் சீர்திருத்தத்திற்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது காங்கிரசில் வேரூன்றிய சோசலிஸ்டுகளிடமிருந்தும், பொதுவாக நமது அரசியலில் பரவலாகக் காணப்படும் சோசலிஸ்டுகளிடமிருந்தும் அல்ல, மாறாக இந்தியாவின் பெருநிறுவனத் தலைவர்களிடமிருந்தும்தான். மறைந்த ராகுல் பஜாஜ் தனது பாம்பே கிளப் என்று அழைக்கப்படும் அமைப்பின் கீழ் ஹெவிவெயிட்களை ஒன்றிணைத்தார்.
மாற்றங்களை தாமதப்படுத்தவும் தடுக்கவும் மற்ற அனைத்து பதவியில் உள்ள லாபிகளையும் போலவே அவர்களும் அதே வாதத்தை முன்வைத்தனர்: நாம் போட்டிக்குள் நுழைய நேரம் இருக்கிறது. நம்மால் போட்டியிட தயாராகும் வரை நாம் நம்மை பாதுகாத்து, பலப்படுத்த வேண்டும். பின்னர் சீர்திருத்தம் செய்யலாம்.
சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தினாலும், பாம்பே கிளப்புக்கு பல ஆதரவாளர்கள் இருந்த போதிலும், அல்லது காங்கிரசுக்குள் நெருக்கடிகளை ஏற்படுத்துபவர்கள் இருந்த போதிலும், ராவ் பின்வாங்கவில்லை என்பது அவரது போற்றற்குரியது. ஆனால், அந்த IMF கடனின் கட்டாயத்தையும், இந்தியா கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால் ஏற்படும் பேரழிவையும் அவர் வெளிப்படையாகக் காட்ட முடியும் என்பதற்காகவும் அது நடந்தது.
இதன் விளைவாக பெருநிறுவன இந்தியாவில் வியத்தகு படைப்பு சீர்திருத்தங்கள் ஏற்பட்டது. இன்று சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனங்களில், அல்லது கார்ப்பரேட் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில், 12 நிறுவனங்கள் 1991 இல் முழுவதுமாக ஒழிந்துவிட்டது, மேலும் பல நிறுவனங்கள் முக்கியத்துவமிழந்தன. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், பிரீமியர் ஆட்டோமொபைல்ஸ், ஓர்கே, எஸ்கார்ட்ஸ் போன்றவற்றை நினைவில் கொள்க! மாறாக, சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டவர்கள் பிரகாசித்தனர். டாடா, மஹிந்திரா, பஜாஜ் கூட. அவைமட்டுமல்லாமல், ஐசிஐசிஐ, எச்டிஎஃப்சி, பாரதி, இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற புதிய நட்சத்திரங்கள் ஜொலிக்கத் தொடங்கின.
இந்தப் படைத்தல் சீர்திருத்தமே முதலாளித்துவத்தின் சாராம்சம். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் (PM-EAC – Prime Minister-Economic Advisory Council) உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் இந்த வாரம் ஒரு கட்டுரையில் எழுதியது இதுதான். கடந்த பத்தாண்டுகளாக இந்த செயல்முறை கிட்டத்தட்ட ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். இந்திய நிறுவனங்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டன.
நாம் எப்படி இந்த நிலைக்கு வந்தோம்? 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி வென்ற பெரும்பான்மை, பெருநிறுவன இந்தியாவால், குறிப்பாக உயரடுக்கினரால், பழைய, சர்வ வல்லமை வாய்ந்த, ‘மை-பாப்’ வகை அரசாங்கத்திற்குத் திரும்புவதாக விளக்கப்பட்டது, அதன் ஆதரவின் கீழ் அவர்கள் செழிக்க முடியும். அப்போதிருந்து கட்டணங்கள் அதிகரிக்கத் தொடங்கியதைக் கண்டோம். இதற்கு ஒரு சிறிய உதாரணம், இந்தியாவில் எஃகு மிகவும் விலை உயர்ந்தது. அப்படியானால், உலகின் மிகப்பெரிய சந்தை மூலதனத்தைக் கொண்ட எஃகு உற்பத்தியாளர் வேறு யாருமல்ல, ஒரு இந்தியர் என்பதில் ஆச்சரியமில்லை. அதிக எஃகு உற்பத்தி செய்யும் மாபெரும் சீன நிறுவனங்கள் கூட குறைத்து மதிப்பிடப்படுகின்றன.
சீர்திருத்தங்களுக்கு முன்பு இருந்த பிரச்சினைகள் மீண்டும் வந்துள்ளதாகத் தெரிகிறது. அதிகரித்து வரும் சக்திவாய்ந்த உயரடுக்குகள் இப்போது சந்தைப் பங்கையும் துறைகளையும் தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றன, மேலும், பொருளாதார வளர்ச்சி உயர்மட்டத்திலிருந்து கீழ்னோக்கியது என்ற பழைய சிந்தனையைப் பின்பற்ற முனைகின்றது. அது உண்மையில் செயற்பட்டதா?
‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்குப் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 2013-14 ஆம் ஆண்டில் இருந்ததைப் போலவே, முழுமையாக 17.3 சதவீதமாக இருக்கும் என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, மூன்றாம் காலாண்டில் உற்பத்தி விவசாயத்தை விட பின்தங்கியிருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யதார்த்தங்களும் இதுதான்: வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பு 2013-14 ஆம் ஆண்டில் 11.6 சதவீதமாக இருந்தது, 2022-23 ஆம் ஆண்டில் 10.6 சதவீதமாகக் குறைந்திருக்கின்றது. இந்த புள்ளிவிவரங்கள் ரிசர்வ் வங்கியின் ‘KLEMS’ தரவுத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஸ்மார்ட்போன் உற்பத்தியில் உண்மையான வெற்றியைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைந்தாலும், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதியின் பங்கு 2013-14 ஆம் ஆண்டில் 25 சதவீதத்திலிருந்து 22.7 சதவீதமாகக் குறைந்துள்ளது (பொருளாதார ஆய்வு, 2023-24). அதன்படி, உலக ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது என்பதையும் இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது.
அரசாங்கப் பாதுகாப்பு இந்தியாவை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியின் உயர்சீர் நிலைக்கு அழைத்துச் செல்லும் என்ற கனவு தகர்ந்து போயுள்ளது. போதுமான கேள்வி நிலை இல்லை என்ற காரணத்தில், நிதியமைச்சர் பலமுறை அறிவுறுத்திய போதிலும், இந்திய நிறுவனங்கள் போதிய முதலீடுகளைச் செய்யவில்லை. அது மட்டுமன்றி, போட்டி ஏற்றுமதி எண்ணமில்லாமல் உள்நாட்டு நுகர்வை மட்டுமே நம்பி சொகுசாகஇருக்க முனைகின்றன. சீன கார்களுக்கும் பிற பொருட்களுக்கும் இந்தியா கதவுகளைத் திறக்கப் போகிறது என்ற பேரச்சத்திலிருக்கின்றார்கள்.
எனவே, துப்பாக்கி முனையில் மட்டுமே தூண்டலுரும் இன்னொரு வலுவான சீர்திருத்த தருணங்கள் இந்தியாவிற்குத் தேவை. டிரம்ப் எங்கள் தலையை குறிவைத்து துப்பாக்கியை நீட்டியுள்ளார். கட்டணப் பாதுகாப்பில் பாரிய குறைப்பு மற்றும் பிற வகையான அரசு சேவைகளில் குறைப்புக்கள் மட்டுமே தொழில்முனைவோர் இந்தியாவை மீண்டும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றும். அத்தகைய சூழ்நிலையில், சில நிறுவனங்கள் மூடப்பட்டால், முதலாளித்துவத்தின் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களைக் கொண்டாடுங்கள். இந்தக் கிளர்ச்சியின் மூலம் மட்டுமே இந்தியாவின் எதிர்கால வீரர்களும் புதிய நட்சத்திரங்களும் வெளிப்படுவார்கள்.
(மொழிபெயர்த்தவர் சுபத்ரா)