இந்தச் சமயத்தில் பஹல்காம் அளவிலான சினமூட்டுந் தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணத்தை யாராலும் உறுதிபட கூறமுடியாது; அதிலும், துள்ளியமாக ஏப்ரல் 22 தாக்குதலை நடத்த தேர்ந்தெடுக்கப் பட்டதன் காரணம் மிக அசாதாரணமானது; யாராலும் விளக்க முடியாதது. இருப்பினும், சில நுணுக்கமான காரண காரிய அவதானிப்புக்களை புரிந்துகொள்வதன் மூலம், இந்த சம்பவத்தின் மூலங்களை ஓரளவு உணர்ந்துகொள்ள முடியும்.
இந்தச் சிக்கலின் முக்கிய, முதற்கூறு, ஏப்ரல் 16ம் தேதி ஜெனரல் அசிம் முநீர் நிகழ்த்திய உரை. இருநாட்டுக் கொள்கை மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகள் பற்றி பகட்டிக்கொண்டாலும், அவரின் அந்த உரையின் முக்கிய கூறு காஷ்மீர் சார்ந்ததாகவே இருந்தது. அவரது பேச்சில் ஆழமாக இருந்த, “அது எங்கள் உயிர்நாடி, நாம் அதை மறப்பதில்லை” என்ற கூற்று, அவதானிக்கப்பட வேண்டியது.
காஷ்மீர் உயிர் மூச்சு என்ற கோட்பாடு, பாகிஸ்தான் ஆய்வுக் கற்கைகளில் முக்கியமானதாகவும், பாகிஸ்தானிய பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அத்தியாவசிய அம்சமாகவும் இருக்கின்றது. ஆனால் பாகிஸ்தானின் ஒரு முக்கியத் தலைவர், வெளிப்படையாக, காஷ்மீர் பற்றி இத்தகைய கருத்தை கூறுவது பல ஆண்டுகளில் இதுவே முதன்முறை. என் கருத்தின்படி, முநீர், காஷ்மீரை மீண்டும் விவாதப் பொருளாக கொண்டு வருகின்றார் என்றே கருத வேண்டும். அவருடைய தொனி, கோபத்தையும் விரக்தியையும் பிரதிபலிப்பதாக இருந்தது, இன்னும் சொல்லப்போனால், எச்சரிக்கை என்றும் கருதக்கூடியதாக இருந்தது.
ஏன் எச்சரிக்கையாக கருதவேண்டும்? ஏப்ரல் 19 – இந்தியா, டெல்லிக்கும் ஶ்ரீநகருக்குமிடையில் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை தொடங்கவிருந்த இந்த நாளில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்விற்கு வருகைதரவிருந்ததையும் கவனிக்கவேண்டும்.
அசாதாரண காலநிலை காரணமாக அந்த தொடக்கவிழா ஒத்திவைக்கப்பட்டது வேறுவிடயம். முநீர் தன் உரையை நிகழ்த்தும் போது இந்த ஒத்திவைப்பு பற்றி அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்த ரயில் தொடர்பு, புதிய காஷ்மீரின் துவக்கவிழா என்ற எண்ணமே பாகிஸ்தானிய இராணுவ ஜெனரலின் பேச்சுரையிலிருந்த அவசரத்திற்கும் விரக்திக்கும் காரணமாக இருந்திருக்கலாம்.
கடந்த மூன்றாண்டுக் காலத்தில், ஜம்மு-காஷ்மீர் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது; அதிக பங்களிப்புடன் அமைதியாக நடந்தேறிய பொதுத்தேர்தல் இதற்கொரு குறியீடாக கருதலாம். அங்கு நிலவிய சாதகமான சூழ்நிலை, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து, 2024ஆம் ஆண்டில் 2.95 மில்லியனைத் தொட்டதும், 2025இல் அது 3.2 மில்லியனாக உயரும் என்ற கணிப்பும் இயல்பாக பிரதிபலிக்கின்றது.
அமைதியான சூழ்நிலை சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு எவ்வளவு அவசியமான காரணி என்பது அனைவரும் அறிந்த ஒரு உண்மை. உல்லாசப் பயணம் காஷ்மீரின் பொருளாதாரத்தின் அச்சாணி. பஹல்காம் மற்றும் அதனைச்சூழவுள்ள பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் அதிகரித்த ஹோட்டல் மற்றும் பயணிகள் விடுதி கட்டுமான வேகம் இதனை பறைசாற்றுவதாக இருக்கின்றது. சுற்றுலாப் பெருக்கம் முக்கியமான வெளிப்படையாக காணக்கூடிய ஒரு மாற்றம். ஆனால், பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சி, பள்ளி செல்லும் இளம் காஷ்மீர் குழந்தைகள், கற்பதற்காகவும் தொழில் வாய்ப்பிற்காகவும் பிர மாநிலங்களுக்குச் செல்லும் காஷ்மீர் இளைஞர்களை கருத்திற்கொண்டால், இது இன்னொரு பரிமாணத்தை புலப்படுத்துகின்றது – புரையோடிக்கிடந்த மனக் காயங்கள் மெதுவாக ஆறிக்கொண்டிருக்கின்றன. பள்ளத்தாக்குப் பிராந்தியத்திற்கு காஷ்மீரிகள் அல்லாத மக்களின் வருகை, காஷ்மீரிய தனித்துவத்தைத் தொலைக்கும் “வந்தேரி-குடியேற்றவாதம்” என்ற அச்சத்தை எட்டு தசாப்தங்களாக காஷ்மீர் மக்களிடையே பாகிஸ்தானிய ஆதரவாளர்கள் விதைத்திருந்தனர். ஆனால் இப்போதோ, காஷ்மீர் மக்கள் இந்தியாவின் சகல பாகங்களுக்கும் சென்று அங்கேயே நிரந்தரமாக வாழும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
இயல்பு வாழ்க்கை முறையும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சீரடையும் எந்த ஒரு நிகழ்வும், பாகிஸ்தானிய விஸ்தரிப்பு கனவை அத்திவாரத்திலேயே ஆட்டம் காணச் செய்துவிடுகின்றது. இந்த பேரச்சம், சுவடாக அல்ல, சுவற்றில் எழுதப்பட்ட சாசணமாக ஆகிவிட்டது. 2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்குப் பின்னர், பாகிஸ்தானிய ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட காஷ்மீர் கிளர்ச்சி ஒருபோதும் நிகழவே இல்லை, அவர்களது கனவு, நிராசையானது. ராவல்பிண்டியிலுள்ள பாகிஸ்தானிய இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தலைமையகத்தில் (GHQ) “காஷ்மீரே எங்கள் இலட்சியம்” என்று கூவிக்கொண்டிருந்த பெருஞ்சாராருக்கு இது ஒரு பின்னடைவு.
தர்க்கரீதியாகவும், புத்திசாலித்தனமாகவும், ஜெனரல் அசிம் முநீருக்கு முன்னர் பதவியில் இருந்த முன்னால் இராணுவத் தளபதி கமர் ஜாவிட் பஜ்வா, காஷ்மீரின் இந்த மாற்றங்களை நிதர்சனமாக ஏற்றுக்கொண்டார் என்ற கருத்து நிலவுகின்றது. ஜெனரல் பஜ்வா மட்டுமல்ல, இன்னும் பல முன்னால் இராணுவத் தளபதிகள் இந்த யதார்த்தத்தை பக்குவமாக புரிந்து கொண்டிருந்தனர். அவர்களும் தேசப்பற்று மிக்க பாகிஸ்தானியர்கள், யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, இந்தியாவுடன் சமரசமாக போவதே தம் மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் உறுதியுடன் இருந்தனர், இதனாலேயே பஜ்வா, வரையறைகளைக் கடந்து அதிகாரபூர்வமற்ற வழிகளையேனும் கையாண்டு, ஒப்பீட்டளவில், கட்டுப்பாட்டுக் கோட்டெல்லையில் (LoC), இந்தியாவுடன் நம்பகமான சமரச போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தார்.
அறிக்கை கையளிப்பு நோக்கில் பாகிஸ்தானுக்கு வருகை தந்திருந்த, 1974-78 களில் பாகிஸ்தான் விமானப் படையின் தலைவராக இருந்த, ஏர் சீப் மார்ஷல் சுல்பிகார் அலி கான் கருத்திடுகையில், “காஷ்மீரை இராணுவ ரீதியாகவோ, இராஜ தந்திர ரீதியாகவோ, அரசியல் சீதியாவோ கையகப்படுத்துவது சாத்திப்படாது என்று என் தேசம் எத்தனை சீக்கிரம் உணர்ந்தி கொள்கின்றதோ, அத்தனை நன்மை நமக்கு,” என்று கூறினார். மார்ஷல் கான் ஒரு கண்ணியமான, விசுவாசமான இராணுவ வீரர். சுல்ஃபிகார் அலி பூட்டோவின் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தினை கைப்பற்றிய அப்போதைய ஜெனரல் முகம்மத் ஸியா-உல்-ஹக்கின் போக்கு பிடிக்காமல், தன் பதவியை ராஜினாமா செய்த தைரியசாலி. பின்னாலில், வாஷிங்டனில் பாகிஸ்தானின் அமெரிக்க தூதுவராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு ஜனவரி 31 தேதி வெளியான இந்தியா டுடே வார இதழில் இந்த கூற்றை மேற்கோள் காட்டிய எனது செய்தி பிரசுரிக்கப்பட்டது. அதற்குப் பின்னரும் பல இராணுவத் தலைவர்கள் இதே கருத்தைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இவற்றை நிர்ப்பந்தங்கள் என்றும், நிர்ணயிக்கப்பட்ட விதி என்ற கொள்கைக்கு முற்றிலும் மாறானது என்ற பார்வையில் முநிர் ஆத்திரமடைந்திருப்பதை எம்மால் யூகிக்கக்கூடியதாக இருக்கின்றது. 1986இல் ஸியா உல்-ஹக்கின் ஆட்சியின் உச்சத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பாகிஸ்தானிய விவாதங்களில் பரவலாக கூறப்படும், “ஸியாச் சேர்ப்பு” என்று பொருள்படும், “ஸியா பாஃர்தி” கோட்பாடுகளை பிரதிபலிக்கும் தோற்றப்பாடுகளை உருவகிப்பது புலனாகும்.
இந்த காலகட்ட அதிகாரிகள் மரபுவழி மார்க்கக் கோட்பாடுகளை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கும் தீவிர இஸ்லாமியவாதிகள். ஸியா உல்-ஹக், மௌளான மௌதுதி வழிதொடரும் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி. அவரும் மார்க்கக் கோட்பாடுகளில் ஈடுபாடுடையவரா என்பதனை நாம் நிர்ணயிக்க முடியாததாக இருக்கின்றது. ஸியா உல்-ஹக்கின் ஏனைய இராணுவக் கட்டளை அதிகாரிகளை சீர்தூக்கி ஆராயுமளவு என்னிடம் போதிய தகவல்கள் இல்லை; இருப்பினும், அவர்கள் அனைவரும் “ஸியா பாஃர்தி” பாரம்பரியம் சார்ந்தவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
அவர் அதிகாரத்தை கைப்பற்றினார் – பாகிஸ்தானிய இராணுவத் தலைமைத்துவத்தை கையகப்படுத்திக்கொள்ளும் அசாதாரண சூழலுக்கு, இயல்பான தொனியை கொடுக்க பயன்படுத்தப்படும் பொது வாக்கியம். பாஜ்வா இராணுவச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே முநீர் ஓய்வு பெறுவதாக இருந்தது. இதன் காரணமாக இராணுவ தளபதியாகும் வாய்ப்பினை இழந்திருந்தார். ஆனால், நம்பமுடியாத ஆச்சரியங்கள் நிறைந்த திருப்பமாக, பாகிஸ்தானைத் தவிர வேறெங்கும் நிகழ முடியாத அதிசயமாக, முநீரின் பெயர் அவரது ஓய்வுக்கு முன்னர் தலைமை இராணுவத் தளபதியாக அறிவிக்கப்பட்டது. தான் இராணுவக் கட்டளைத் தளபதியாக அறிவிக்கப் பட்டால், அப்போதைய பிரதமராக இருந்த இம்ரான் கானை கட்டுப்படுத்துவதாக கூறியதே இந்த வியத்தகு நிகழ்வுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். முன்னெப்போதும் நடந்திராத அசாதாரண நிகழ்வாக, பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு நாட்களுக்கு, இரண்டுக் கட்டளைத் தளபதிகள் சேவையில் இருந்தனர்.
முநீர் தனித்துவமான ஒரு இராணுவ அதிகாரி; அவர் பாகிஸ்தான் இராணுவ கலைக்கழகத்தில் அன்றி, பாகிஸ்தான் அதிகாரிகள் பயிற்சிப் பள்ளியின் பட்டதாரி. துணைக்கண்ட இராணுவங்களில், அதிகாரிகள் பயிற்சிப் பள்ளி மட்டுப்படுத்தப்பட்ட சேவை அதிகாரிகளையே உருவாக்கும் அமைப்பாகும், இங்கு பயின்ற அதிகாரிகள் தலைமைத்துவ அந்தஸ்திற்கு உயருவது இல்லை, ஆனால் முநீர் விதிவிலக்காக முதன்முதலில் அந்தப் பதவியினை அடைந்தார். முற்றிலும் எதிர்பாராத சம்பவங்கள் அவரை அந்த உயர்ந்த நிலைக்கு உந்தியது. புல்வாமா தாக்குதல் நடந்த போது, முநீர் ISI இன் தலைவராக இருந்தார். அத்தாக்குதலின் பின், குறுகிய எட்டே மாதங்களில், பாஜ்வா அவரை பணிமாற்றம் செய்தார். குஜ்ரன்வாலாவின் படையணித்தலைவராக அவர் பதவியளிக்கப்பட்டார். இது அவரது இராணுவ அதிகார வளர்ச்சியின் முக்கிய நிகழ்வாகும். பாகிஸ்தானில், கட்டளைத்தளபதியாக பதவி வகிக்க, படையணித்தலைமைத்துவ அனுபவமிருக்க வேண்டியது அவசியமாகும். விதி, ஆரவாரமில்லாமல் அந்த தேவையை பூர்த்தி செய்துவிட்டது.
மனித கட்டுப்பாடுகளையெல்லாம் தகர்த்து, விதி, பெரும் எதிர்ப்பார்ப்புக்களுடன் என்னை இந்த இடத்தில் அமர்த்திவிட்டது என்று முநீர் எண்ணியிருக்கக் கூடும். அரசியல் ரீதியான அனைத்து எதிர்ப்புக்களையும் அழித்துவிட்டார். இம்ரான் கானையும் அவரது மனைவி புஷ்ராவையும் பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையிலடைத்தார். முக்கிய அரசியற் கட்சியான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஈ-இன்ஸாஃப் கட்சியை சட்டரீதியாகவும் துறைரீதியாகவும் கட்டுப்படுத்தி, எதிர்ப்பே இல்லாமல் ஆட்சியமைத்தார்.
எந்த பெரிய கிளர்ச்சிகளுக்கும் இடமளிக்காமல், முநீர் அனைத்து சவால்களையும் முறியடிக்கும் நோக்கத்தில், பின்னிரவுகளில் இரகசியமாக புதிய சட்டதிருத்தங்களை அமல்படுத்தி , அரசியல் சாசணங்களை மாற்றியமைத்து, ஏறத்தாழ பாகிஸ்தானின் அரசியலமைப்ப்பையே தனக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொண்டார். மிக முக்கியமான குறிப்பு: இவரது மாற்றங்கள் இராணுவக் கட்டளைத் தளபதியின் சேவைக்காலத்தை மூன்றிலிருந்து ஐந்தாக உயர்த்தினார்.
மனித எண்ணங்களை புரிந்து கொள்வது தேர்ந்த மனோதத்துவ நிபுணர்களுக்கே சவாலான ஒன்று. இது வரையரைக்குட்படாத விஞ்ஞானம். மனோதத்துவவியலாளருக்கு மறை பொருளான ஒன்று, சாதாரண பத்திரிகையாளன் புரிந்து கொள்ள முயற்சிப்பது அசட்டையான துணிச்சல். இதுவரைப் பார்த்த தகவல்களை ஒன்றுடனொன்று பொறுத்தி, “விதி என்னிடமிருந்து பெரிதாக ஒன்றை எதிர்ப்பார்க்கின்றது” என்ற மனோபாவத்துடன் ஆப்ரல் 16ஆம் திகதி உரையை உற்றுநோக்கினால், அதன் அர்த்தம் புலப்படத் தொடங்கும்.
காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவது தடைபட வேண்டும் என்பதே பாகிஸ்தான் ஜெனரல் முநீரின் ஆவல். பஹல்காம் சம்பவம் அவருடைய உரைக்கும் தாக்குதலுக்குமிடைப்பட்ட குறுகிய காலத்தில் நடைபெற்ற ஒன்றல்ல. மாதங்கள் ஆகியிருக்காவிடினும், சில வாரங்களாவது இதற்கான திட்டமிடல் நடந்தேறியிருக்க வேண்டும். தாக்குதலை நடத்தும் நபர், இடம், நடத்தும் விதம், விளைவு, தப்பும் வழிகள், மறைவு என்று அனைத்துமே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.
நமது அறிவியற் செய்தியாளராகிய சௌமியா பிள்ளை, மெக்ஸார் டெக்னாலஜியில் பஹல்காம் பிராந்தியத்தின் துள்ளிய செய்மதிப் படங்களுக்கான தனியார் கோரிக்கைகள் இந்த வருட பெப்ரவரி மாதத்தில் கனிசமாக அதிகரித்திருக்கும் ஒரு சுவாரசியமான விடயத்தை அவதானித்திருக்கின்றார். ஆனால் இதை வைத்தி எந்த முடிவிற்கும் வரவியலாது, ஆனால் ஒரு சின்னஞ்சிறிய பாகிஸ்தானிய நிறுவனம் மெக்ஸார் டெக்னாலஜியில் வணிகப் பங்காளியாகியிருக்கின்றது. இதன் ஸ்தாபகர், பாகிஸ்தான் அணுசக்தி முகவர் நிறுவனத்திற்கு இரகசிய தொழிநுட்பங்களைப் பெற்றுக்கொள்ள ஏற்றுமதி விதிகளை மீறியதற்காக தண்டனை பெற்ற மோசடித் தொழிலதிபராவார். இதுபோன்ற நிகழ்வுகள் தற்செயலானதா? கடந்த 12 மாதங்களில் சராசரியால 2 ஆக மாத்திரமே இருந்த இடத்தில், ஒரு குறுகிய மாதத்தில், பஹல்காம் பிரந்திய செய்மதிப் படங்களின் கோரிக்கை 12 ஆக மெக்சாரிடம் அதிகரித்ததும், அடுத்து வந்த மார்ச் மாதத்தில் எந்த கோரிக்கையும் இல்லாமல் இருப்பதன் பிண்ணனி என்ன?
இப்படி நோக்குங்கள்! திட்டம் தயாராக இருக்கும் பட்சத்தில், அத்திட்டம் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்திருக்கின்றது. முநீர் பற்றிய எமது கணிப்பீடு சரியாக இருக்கும் பட்சத்தில், டெல்லியிலிருந்து காஷ்மீருக்கான இரயில் சேவை (முநீரைப் பொருத்த மட்டில் இது இந்தியாவிலிருந்து காஷ்மீருக்கான இரயில் தொடர்பு) பள்ளத்தாக்கு மக்களின் மனோநிலையை மாற்றி, இந்தியாவுடன் கைகோர்க்கும் வாய்ப்புக்கான மிகப்பெரிய வெற்றி! முநீருக்கி எப்பாடுபட்டாவது அதனை தவிர்க்க வேண்டும், அது போர்ப் பிரகடணமெனும் பெரிய இழப்பாக இருந்தாலும் அவருக்கு அது அவசியமானது.
(மொழிபெயர்த்தவர் சுபத்ரா)