தமிழ் நாட்டில் தவிர்க்க முடியாத பதிப்பகங்களுள், 99 வருட பாரம்பரியமிக்க பதிப்பகமான விகடன் குழுமம் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. பிப்ரவரி 10, 2025 அன்று விகடன் பிளஸ் தன் அட்டையில் மோடியும் டிரம்பும் இருக்கும் கேலிச்சித்திரத்தை பிரசுரித்திருந்தது. அப்படத்தில் டிரம்பின் முன்னால் பிரதமர் மோடி சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருப்பது போன்ற தோற்றத்தில் – சமகால பிரச்சினையான சட்டவிரோத குடியேறிகளின் தொடர் நாடுகடத்தல் நிலைமையை உருவகப்படுத்துவதாக காட்டப்பட்டிருந்தது.
பாஜாகாவின் தமிழ்நாடு பிரிவு இந்நிகழ்வை வரவேற்கவில்லை, மாறாக, பாஜாகாவின் மாநிலத்தலைவர் கே. அண்ணாமலை, இந்திய பத்திரிகை சபை, மாநில மந்திரிகள் சபை, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகனுக்கும் “அவதூறான” சித்தரிப்பிற்காக விகடன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடிதங்களை அனுப்பினார். அதன் பின் சில மணிநேரத்திலேயே விகடன் வலைத்தளம் முடக்கப்பட்டு, அதன் பயனர்களால் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இந்தியாவுக்குள் வலைதளம் முடக்கப்பட்டிருந்தாலும் சர்வதேச அரங்கில் விகடன் செயற்பாட்டிலேயே இருந்தது.
முன்னறிவிப்பில்லாமல், தங்கள் வலைதளம் முடக்கப்பட்டதை சட்டவிரோத செயலாக பார்ப்பதாகவும், அதனை எதிர்த்து சட்டரீதியாக போராடுவதாகவும் விகடன் முகாமைத்துவம் சூளுரைத்திருக்கின்றது. வலைதள முடக்கத்திற்கு யார் உத்தரவிட்டார்கள் என்றுகூட தெரியாத போதும், சட்டரீதியாக நீதிமன்றத்தில் இப்பிரச்சினையை எதிர்கொள்வோம் என்று விகடனின் நிர்வாக இயக்குனர், திரு பி. ஶ்ரீனிவாசன் கூறினார். மேலும், இவ்வலைதள முடக்கப்பட்டதற்கு அடுத்த நாள். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திலிருந்து “கேலிச்சித்திரம் தொடர்பான விளக்கம்” கோரி ஒரு மின்னஞ்சல் வந்தபோதும், அம்மின்னஞ்சலில் அதிகாரபூர்வமாக வலைதளம் முடக்கப்படுவதாக எந்த அறிவிப்பும் இருக்கவில்லை என்று கூறினார். மத்திய அரசு வலைதளத்தை முடக்கியிருக்கலாம் என்பது அனுமானமாக இருக்கின்றது.
ஆளும் திமுக மற்றும் அதன் ‘இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’ பங்காளிகளும், இச்செயல் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று மத்திய அரசைக் கண்டிப்பதாக கூறி விகடனுக்கு தங்கள் ஒருமித்த ஆதரவைத் தெரிவித்தனர்.
எடிட்டர்ஸ் கில்ட் போன்ற அமைப்புகளும் விகடனுக்கு ஆதரவாக, வலைத்தளத்தை மீளசெயற்படுதக் கோரி நிர்பந்தித்தனர்.
முரண்பாட்டின் உச்சம்
விகடன் வலைத்தள முடக்கம் பல வழிகளிலில் தமிழ்நாட்டில் கேள்விக்குள்ளாகியிருக்கும் ஊடக சுதந்திரத்தை குறிப்பிட்டுக்காட்டுகின்றாது. மாநிலத்தில் செயற்படும் பிரதான ஊடகங்கள் பெரும்பாலும் அரசுக்கு அடிவருடியாகவும் இசைவாகவும் இருப்பதால், யூடியுபர்களும் சமூக ஊடகங்களுமே பாரபட்சமின்றிய, நம்பத்தகுந்த ஊடகவியலாக இருக்கின்றது.
திமுக தலைமையிலான மாநில அரசு அத்தகைய நடுவுநிலை ஊடகவியலாளர்களை நொருக்கும் விதத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. பல யூடியூபர்கள் அற்ப காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் (சில கைதுகள் தீவிரவாதிகளை வேட்டையாடுவது போல நள்ளிரவில் நிகழ்ந்துள்ளன).
யூடியூபர் ‘சவுக்கு’ சங்கர், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பல திமுக எதிர்ப்பு குரல்களில் ஒருவர்.
இத்தகைய ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் விகடன் மீதான மத்திய அரசின் நடவடிக்கையை விமர்சிப்பது சற்று முரண்பாடாக இருந்தது.
விகடன் மீது நடவடிக்கை எடுக்கக் கடிதமெழுதி கோரியதன் மூலம், மாநில பாஜாகாவும் தன் இயலாமையை வெளிப்படுத்திவிட்டது. அவர்கள் விகடனுக்கு எதிராக அவதூறு வழக்கினை தொடுப்பது இன்னும் எளிதாக இருந்திருக்கலாம், ஆனால் வலைதள முடக்கத்திற்கு ஆதரவாக இருந்ததன் மூலம் பாஜக திமுகவை விட எந்த வகையிலும் உயர்ந்ததல்ல என்பதை நிறுபித்துவிட்டது.
அதிகார நடவடிக்கையா?
விகடன் குழுமம் தமிழ்நாட்டின் போற்றத்தகு பதிப்பகங்களில் ஒன்றாகும். 1926 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு 1928 ஆம் ஆண்டு பழம்பெரும் ஊடகப் நிறுவனர் எஸ்.எஸ்.வாசனால் உரிமம் பெற்றுக்கொள்ளப்பட்டு, நீண்டகாலமாக மாநிலத்தில் ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது.
நிறுவனத்தின் பாரம்பரிய பெருமை, அதன் தொடர்ச்சி, மக்களிடையே இருக்கும் அங்கீகாரம், செல்வாக்கு என்பனவே விகடனுக்கு எதிரான நடவடிக்கை மக்கள் சீற்றத்திற்கு வழிவகுத்தது. ஒரு யூடியூபரை கைது செய்வது போலவோ அல்லது சமூக வலைதளத்தை முடக்குவது போன்ற நிகழ்வு அல்ல, மாறாக இச்சாமர்த்தியமற்ற செயல் தமிழ்நாட்டில் பாஜாகாவுக்கு இதுவரை நிராசையாக இருக்கும் வாக்கு எண்ணிக்கையை பெருக்கத்தை வெகுவாக பாதிக்கும்.
முரண்கோட்பாட்டாளர்களும் தீவிரமாக இயங்குகின்றனர். சிலர், விகடன் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதன் மூலம், அண்ணாமலை தனது கட்சி சகாவான எல். முருகனை சங்கடப்படுத்துவதற்கான முயற்சியாகக் கொள்கின்றனர். அந்தக் கோட்பாடு அப்படியே இருக்க, பிரதமர் மோடி “அவமதிக்கப்பட்டபோது” செயல்படாமல் இருக்கும் எல். முருகன் திறனற்ற பலவீனமானவர் என்பதைக் காட்டுவதற்காக அண்ணாமலை இவ்வாறு செயற்பட்டார் என்றும் கருதுகின்றனர். இது முருகனை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கலாம். புதிய மாநில பாஜக தலைவரின் அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இச்சம்பவம் நடைபெற்றதாலும், அண்ணாமலை இரண்டாவது முறையாகப் மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாலும், இத்தகைய கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் இருக்கின்றனர்.
விகடனில் பிரசுரிக்கப்பட்ட இந்த கேலிச்சித்திரத்தின் மீதான அரசின் முறையற்ற அணுகுமுறை மத்திய அரசு மண்ணைவாரி தன் தலையில் தானே போட்டுக்கொண்டுள்ளது. ‘முறையான அறிவிப்பின்றி விகடன் வலைதளம் முடக்கப்பட்டது’ என்ற விகடனின் கூற்று, ஊடக சுதந்திரம் குறித்த கடுமையான கேள்விகள் உருவாக வழிசமைத்துள்ளது.
தடை நீக்கப்படாவிட்டால் விகடன் நீதிமன்றத்திற்குச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எந்த முன்னெச்சரிக்கையோ அல்லது ஒப்புதலோ இல்லாமல் இணைய உள்ளடக்கத்தைத் தடை செய்ய முடியும் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். ஊடகங்கள் அதன் ஸ்திரத்தன்மைக்கு ஏற்பட்டுள்ள இக்கடுமையான அச்சுறுத்தலை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் ஒரு அரசியல் ஆய்வாளர், மருத்துவர் மற்றும் சுகாதார ஐடி நிபுணர். கருத்துக்கள் தனிப்பட்டவை.