புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நகைச்சுவை என்ற பெயரில் அவமதித்த மேடை நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை பாரதிய ஜனதா கட்சி (பாஜக) எம்பி கங்கனா ரனாவத் கடுமையாக சாடினார்.
‘இரண்டு நிமிட’ புகழுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் அவமதிக்கக்கூடாது என்று இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவையைச் சேர்ந்த பாஜக எம்பி கூறினார்.
“வெறும் இரண்டு நிமிட புகழுக்காக யாராவது இதைச் செய்யும்போது, நம் சமுதாயம் எத்தகை மார்க்கத்தில் செல்கிறது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்… நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், அவமதிப்பதும் அவதூறு செய்வதும்…!, ஒருவருக்கு அவரது சுயமரியாதையே மிக முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், அதையே நீங்கள் கேலிசெய்வதும் புறக்கணிப்பதும்… யார் இவர்கள்?, அவர்களின் தகுதிகள் தான் என்ன? அவர்களால் எழுத முடியுமானால், அவர்கள் இலக்கியங்களைப் படைக்கட்டும்,… நகைச்சுவை என்ற பெயரில் மக்களையும் நமது கலாச்சாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வது… இது சட்டத்திற்கு எதிரானதல்ல, எனக்கு செய்யப்பட்டதோ (அவரது பங்களாவை இடித்தது) சட்டவிரோதமானது, இருப்பினும் நான் இரண்டு சம்பவங்களையும் ஒப்பிட மாட்டேன்,” என்று ரனாவத் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை, மும்பையின் யூனிகாண்டினென்டல் ஹோட்டலில் உள்ள ஹாபிடேட் ஸ்டுடியோவில் குணால் கம்ரா தனது ‘நயா பாரத்’ (புதிய இந்தியா) என்ற ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியை நிகழ்த்தினார், அதில் அவர் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கிண்டலாக பழித்துக்கொண்டிருந்தார். மகாராஷ்டிராவிற்காக, அவர் ஷிண்டேவை ‘கத்தார்‘ (துரோகி) என்று அழைத்த ஒரு பாடலைக் உருவாக்கியிருந்தார்.
“நீங்கள் ஒருவரை ஏற்றுக் கொள்கிறீர்களோ மறுக்கின்றிர்களோ, அவர்களை கேலி செய்வது, குறிப்பாக எனக்கு நடந்த ஒரு சட்டவிரோத சம்பவத்தை கேலி செய்வது சரியல்ல. அந்த சம்பவத்தை இதனுடன் ஒப்பிட மாட்டேன், ஏனென்றால் அது சட்டவிரோதமானது, ஆனால் இது முற்றிலும் சட்டபூர்வமானது… அவரை கேலி செய்யும் இவர்கள் யார்? இவர்களுக்கு என்ன தகுதிகள் உள்ளன? அப்படி இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதை சாதித்துவிட்டார்கள்?” என்று ரனாவத் கேட்டார்.
கம்ராவை கடுமையாக விமர்சித்த அவர், ‘யாரையும் அவமதிப்பது சரியல்ல… நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் ஒருவரின் தொழிலை கொச்சைப் படுத்துகின்றீர்கள்’ என்றார்.
நகைச்சுவை என்ற பெயரில் ஒருவரை அவமதிப்பது என்பது ஒரு மோசமான பிற்போக்கு ரசனை என்று பாஜக எம்.பி. கூறினார். “நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் யாரையும் அவமதிப்பது (நல்லதல்ல). நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் ஒருவர் செய்த அனைத்தையும் ஊதாசினப்படுத்துகின்றீர்கள். அவரை அவமதிக்கிறீர்கள். ஷிண்டே ஜி முன் ஒரு காலத்தில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர், அவர் சுயமாக நிறைய சாதித்துள்ளார். குணால் கம்ராவின் தகுதிகள் என்ன?”
ஒரு தனிநபரின் வாய்ப்பேச்சிற்கு பல எதிர் விளைவுகள் ஏற்படலாம் என்று பாஜக எம்.பி. கூறினார். “மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி கூறியது போல, நாங்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். எதிர் விளைவுகள் ஏற்படலாம். சட்டப்பூர்வமாக உங்களிடம் கேள்வி கேட்கப்படும்போது நீங்கள் அதை தார்மீகமாக ஏற்றுக்கொள்வீர்களா,” என்று அவர் கேட்டார்.