புதுடெல்லி: இந்தியாவில் பயங்கரவாதம் அதன் ‘அழிவை’ நெருங்கி வருவதை வலியுறுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தனது ராஜ்யசபா உரையில், இந்துக்கள் “ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது” என்று கூறினார். பஹல்காம் படுகொலை மற்றும் ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதத்தின் போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்த ஷா, காங்கிரஸ் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு வழங்கியது, ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அதை திரும்பப் பெறும் என்று கூறினார்.
“காங்கிரஸ் கட்சியின் மென்மையான கொள்கைகளும், சமாதானப்படுத்தும் அணுகுமுறையும் நாட்டில் பயங்கரவாதம் வளரவும் செழிக்கவும் அனுமதித்தன. அதிர்ஷ்டவசமாக, வெறும் ஆவணங்களை நம்பியிருக்காமல், பிரம்மோஸ் ஏவுகணையை நிலைநிறுத்துவதன் மூலம் தீர்க்கமான நடவடிக்கைகளுடன் பதிலளிக்கும் தலைமை இப்போது நம்மிடம் உள்ளது,” என்று அவர் கூறினார்.
மேலும், “நீங்கள் (காங்கிரஸ்) காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுத்தீர்கள், ஆனால் உறுதியாக இருங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இன்று, காஷ்மீர் பயங்கரவாதத்திலிருந்து விடுபடும் என்ற செய்தியை இந்த அவையிலிருந்து நான் தெரிவிக்க விரும்புகிறேன். இது ஸ்ரீ நரேந்திர மோடியின் தீர்மானம்.”
ஏப்ரல் 22 அன்று பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கிய பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானை இணைக்கும் உறுதியான ஆதாரம் இல்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் மதிப்பீட்டை விமர்சித்த ஷா, “ஆபரேஷன் சிந்தூர் தீர்க்கமானது என்று கூற முடியாது என்று சிதம்பரம் நேற்று கூறினார். சிதம்பரம் சாஹேப் இங்கே இல்லை, ஆனால் நான் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன். 1965 மற்றும் 1971 போர்கள் தீர்க்கமானவையா என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவை தீர்க்கமானவை என்றால், பயங்கரவாதம் ஏன் தொடர்ந்து பரவியது?”
முந்தைய அரசாங்கங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஷா குற்றம் சாட்டினார்.
“இத்தனை ஆண்டுகளாக, அவர்களை (பயங்கரவாதிகளை) அச்சுறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, எனவே அவர்கள் ஏன் பயந்திருப்பார்கள்… நாங்கள் தொடர்ந்து ஆவணங்களை அனுப்பிக்கொண்டே இருந்தோம். நரேந்திர மோடி அவர்களுக்கு (பாகிஸ்தானுக்கு) சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுத்தார். கௌஃப் பயதா ஹோ கயா (பயங்கரவாதிகள் மத்தியில் பய உணர்வு நிலவியது).”
“எங்கள் அமைப்புகள் அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அவர் (சிதம்பரம்) உள்துறை அமைச்சராக இருந்த காலத்தில், அப்சல் குரு தூக்கிலிடப்படவில்லை… மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, திக்விஜய சிங் ஆர்.எஸ்.எஸ். தான் இதைச் செய்ததாகக் கூறினார். அவர்கள் யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்… எதைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள்,” என்று ஷா கேட்டார்.
பிரதமர் மோடியின் தீர்க்கமான நடவடிக்கையைப் பாராட்டிய ஷா, முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதாக மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார். இன்று நான் பெருமையுடன் உலகிற்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு இந்து ஒருபோதும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என்று அறிவிக்கிறேன். இந்துக்கள் ஒருபோதும் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது.”
“நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? நீங்கள் போலி வழக்குகளைப் போட்டீர்கள், அவற்றில் எதுவும் நீதிமன்றத்தில் நிற்கவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள், தேசபக்த சங்கத்தினர் மீது குற்றம் சாட்டினீர்கள் … உங்கள் அற்ப அரசியலுக்காக, நீங்கள் தோற்றீர்கள் …,” என்று அவர் கூறினார். ஆனால் ஷா தனது உரையைத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதத்தின் போது பிரதமர் இல்லாததை எதிர்த்து எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தன.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ஆட்சேபனையை எழுப்பினார், அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். “16 மணி நேர விவாதத்திற்குப் பிறகு, பிரதமர் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். எழுப்பப்பட்ட கேள்விகள் பிரதமரைப் பற்றியது, நீங்கள் (அமித் ஷா) பதிலளிக்க முடியாது என்பதல்ல. மேலும், பிரதமர் இங்கு இல்லாதது இந்த அவைக்கு அவமரியாதை” என்று கார்கே கூறினார்.
அதற்கு பதிலளித்த ஷா, நாடாளுமன்றத்தில் தனது வாதத்தை முன்வைக்க பேச்சாளர்களின் வரிசையைத் தேர்ந்தெடுப்பது அரசாங்கத்தின் விருப்புரிமை என்று கூறினார்.
மகாதேவ் என்ற இராணுவ நடவடிக்கைக்கு ‘மதத்தின் அடிப்படையில்’ என்று அரசாங்கம் பெயரிட்டதை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவானுக்கு பதிலளித்த ஷா, இது சிவாஜி பயன்படுத்திய போர் முழக்கமும் கூட என்றார். “அவர் முகலாயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காகப் போராடினார். இந்தியாவின் மேலாதிக்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிரான சின்னம் இது. இந்தியா அவர்களுக்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளது.”
இந்தியாவில் பயங்கரவாதம் ‘அதன் வீழ்ச்சியை நெருங்கி வருவதாக’ புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். “2004 மற்றும் 2014 க்கு இடையில், மொத்தம் 7,217 பயங்கரவாத சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், ஜூன் 2015 முதல் மே 2025 வரை, சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து 2,150 ஆகக் குறைந்துள்ளது, இது பயங்கரவாத நடவடிக்கைகளில் 70 சதவீதம் குறைப்பை பிரதிபலிக்கிறது,” என்று அவர் கூறினார்.
மேலும், “இன்று, காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் தருவாயில் உள்ளது என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். நமது சொந்த காஷ்மீரி இளைஞர்கள் ஆயுதங்களை எடுப்பார்கள் என்பதால், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை அனுப்ப வேண்டிய அவசியமே இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக எந்த காஷ்மீரி இளைஞரும் எந்த பயங்கரவாத அமைப்பிலும் சேர்க்கப்படவில்லை என்ற தரவை நான் முன்வைக்கிறேன்.”
(மொழிபெயர்த்தவர் சுபத்ரா)
