சென்னை: மாநிலத்திற்கு முதலீடு ஈர்ப்பு நோக்கத்துடனான தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்க பயணம் துணை முதல்வராக அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை நியமிப்பது குறித்த ஊகங்களுக்கு தற்காலிகமாகத் தீர்வு கண்டுள்ளது.
எவ்வாறாயினும், முதல்வரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதான கழக (திமுக) மூத்த உறுப்பினர்களுக்கும் இளைய உறுப்பினர்களுக்கும் இடையிலான உள் பூசல் உதயநிதியின் பதவியுயர்வு தாமதத்திற்கு காரணமாகலாம் என்று திபிரிண்ட் அறிகின்றது.
ஸ்டாலின் தற்போது அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழகத்துக்கான முதலீட்டு திட்டங்களை பரிசீலிப்பதுடன் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து உரையாடுகிறார். அவரது அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக உதயநிதி ஆகஸ்டு 25ம் தேதி கழகத்தின் மூத்த தலைவர்களை சந்தித்து இளைய தலைமைக்கான வாய்ப்பு பற்றி கோரிக்கையை முன்மொழிந்திருந்தார்.
“இளைஞர்கள் நம் கட்சியில் இணைந்து பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றார்கள். அவர்களை பக்குவமாக்கி வழிநடத்தி பொறுப்புகளை வழங்கி அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்”, என்று கழகத்தின் பொறியிலாளர் பிரிவு ஒருங்கமைத்திருந்த தனது பாட்டனார், முன்னாள் முதல்வர், மு கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்ட கூட்டத்தில் பேசினார்.
கடந்தவாரம், திமுக மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகனுடனான சந்திப்பில் நடிகர் ரஜினிகாந்தின் பரிகாசத்தில் கழகத்தின் மூத்த தலைவர்களுக்கிடையிலான அதிருப்திகள் வெளிச்சத்திற்கு வந்தன.
அரசியல் விமர்சகர் பி.சிகாமணி கூறுகையில், கட்சிக்குள் நீண்ட காலமாக நிலவி வரும் பகையின் அறிகுறிகள் இவை. “எந்த நோக்கமும் இல்லாமல், கட்சிக்கு சுமையாக இருக்கும் மூத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது, மேலும் இது ஒரு இலகுவான வழியில் வெளிப்பட்டிருக்கின்றது.”
இந்த வழிகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக உதயநிதியின் துணை முதல்வர் பதவி உயர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வட்டாரங்கள் திபிரிண்டிடம் தெரிவித்தன. “அவருக்கு இந்த பதவி நீண்ட காலத்திற்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது பகிரப்படலாம் என்ற எதிர்பார்ப்புகளும் கட்சிக்குள் உள்ளன. ஒரு கட்டத்தில், உதயநிதி உட்பட மூன்று துணை முதல்வர்களை நியமிப்பது குறித்து விவாதங்கள் நடந்தன. ஆனால் அந்த யோசனை கைவிடப்பட்டது “என்று தி. மு. க. வில் உயர்மட்ட வட்டாரம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், இளைஞர் அணிச் செயலாளராக இருந்த உதயநிதி, மூத்த அமைச்சர்கள் உதவியின்றி ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் குறைந்தபட்சம் 10,000 ஆதரவாளர்களை தானே சுயமாக சேர்ப்பது என்ற பணியை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டார் என்று திபிரிண்ட் முன்பு தெரிவித்திருந்தது.
மூத்த வயதினரின் முணுமுணுப்புக்கள்
ஆகஸ்டு 24ஆம் தேதி தமிழக அமைச்சர் எ.வ. வேலு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், தன் உரையில், கடும் நெருக்கடிகளுக்குள்ளாக்கும் மூத்த அங்கத்தவர்களை முன்னாள் முதல்வரும் ஸ்டாலினின் தந்தையுமான மு க கருணாநிதி கையாண்ட பேராண்மையை புகழ்ந்தார்.
“புதிய மாணவர்களை கையாள்வது எளிது, ஆனால் வயதான அங்கத்தவர்களை கையாள்வதே மிகப்பெரிய சவால்.” இங்கிருக்கும் மூத்த மாணவர்கள் தோல்வியடைந்தவர்கள் அல்லர், மாறாக அவர்கள் அனைவரும் உயரிய தகைமைகளை பெற்றும் பள்ளியிலிருந்து வெளியேராமல் பிடிவாதமாக இருக்கின்றார்கள்”, என்று ரஜினிகாந்த் பேசினார். மேலும் துரை முருகனை குறிப்பிட்டு பேசியபோது, அவரை கையாள்வது கருணாநிதிக்கு பெரும் சவாலாக இருந்தது என்று கூறினார்.
இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக மறுநாள் அமைச்சர் நடிகரை சீண்டும் விதமாக பொக்கையும் நரையும் கொண்ட வயோதிக நடிகர்கள் இன்னும் திரையிலிருக்கின்றார்கள் என்று சாட்டியிருந்தார்.
பின்னர் இருவருமே இந்த கருத்துக்கள் வெறும் கேலிப்பேச்சுக்கள் அன்றி அவதூற்று வார்த்தைகள் அல்ல என்று தெரிவித்திருந்தார்கள்.
மேற்குறிப்பிட்ட விஷயங்களிலிருந்து மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் உதயநிதி இளைஞரணி செயலாளராக்கப்பட்டு பின்னர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சராக பதவியேற்றது முதல் தொடர்வது நிதர்சணமாகிறது. “மூத்த தலைவர்களிடமிருந்து வெளிப்படையாக எதிர்ப்புகள் இல்லாதபோதும், உதயநிதி மீது எளிதில் கண்டுணர முடியாத ஒரு அதிருப்தி நிலவுகின்றது” என்று நம்பத்தகு ஆதாரங்கள் சொல்கின்றன.
ரஜினிகாந்தின் பேச்சை மேற்கோள் காட்டி மறுநாள் கழக பொறியியலாளர் பிரிவு ஒருங்கமைத்திருந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி, இளைஞர்கள் கட்சியில் அதிக பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்குமாறு மூத்த தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உதயநிதியின் கருத்து இளையவர்களை கட்சியில் சேருவதற்கான அழைப்பு மட்டுமே, இதில் மூத்தவர்களுக்கும் இளையவர்களுக்கும் இடையிலான இழுபறி அல்ல என்று திபிரிண்டிடம் தெரிவித்தார். மேலும் “நாங்கள் அனைவரும் ஸ்டாலின் தலைமையில் செயல்படுகிறோம். அவர் என்ன சொன்னாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்”, என்று கூறினார்.
ஸ்டாலினின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதான செய்தியாளர் சந்திப்பின் போது நாடு திரும்பியதும் அமைசச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, “மாற்றம் ஒன்றே மாறாதது, பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.
ஸ்டாலினின் அமெரிக்க பயணம்
இந்த வாரம் அமெரிக்கா சென்ற ஸ்டாலின் செப்டெம்பர் 12 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்.
அமெரிக்க பயணத்திற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் உட்பட்ட தனது முந்தைய வெளிநாட்டு பயணங்களின் மூலம் 10 ,882 கோடி முதலீட்டு பிரேரணைகள் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் சாத்தியப்பட்டிருப்பதாக கூறினார்.
“இந்த முதலீடுகள் மாநிலத்தில் 18,500 பேருக்கு வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தும்”, என்று முதல்வர் கூறினார்.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மொத்தம் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன; 9,99,093 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுடன், சுமார் 18.89 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
