புது தில்லி: கிரீன்லாந்தில் அமெரிக்க குடிமக்கள் இரகசிய “செல்வாக்கு நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாக நாட்டின் பொது ஒளிபரப்பாளரான டி.ஆர். தெரிவித்ததை அடுத்து, டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை அமெரிக்க தூதர் மார்க் ஸ்ட்ரோவை வரவழைத்தது.
அந்த அறிக்கையின்படி, தீவை அமெரிக்க கட்டுப்பாட்டிற்கு ஆதரவளிக்கும் முயற்சியில் மூன்று பேர் உள்ளூர் டிரம்ப் ஆதரவாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தனர். கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆதாரங்களை மேற்கோள் காட்டி, அவர்கள் அரசாங்க உத்தரவின் பேரில் செயல்படுகிறார்களா அல்லது தாங்களாகவே செயல்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று டி.ஆர். கூறினார்.
“கிரீன்லாந்து மீதும், டென்மார்க் இராச்சியத்தில் அதன் நிலைப்பாடு குறித்து வெளிநாட்டு சக்திகள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவதை நாங்கள் அறிவோம்,” என்று வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் செய்தியாளர்களிடம் கூறினார். “இராச்சியத்தின் உள் விவகாரங்களில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது.”
கிரீன்லாந்து, அட்லாண்டிக் பிராந்தியத்தில் டென்மார்க் இராச்சியத்திற்குட்பட்ட உள்ள ஒரு வளங்கள் நிறைந்த பெரிய நிலப்பரப்புடைய சுயாட்சிப் பிரதேசமாகும். கிரீன்லாந்து தீவை இணைக்க விரும்புவதாக பலமுறை கூறும் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு அத்தகைய நடவடிக்கையைச் சார்ந்துள்ளது என்று வாதிடுகின்றார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் இந்த யோசனையை உறுதியாக எதிர்க்கின்றன.
நூக்கிற்கு விஜயம் செய்தபோது, மூன்று அமெரிக்கர்களில் ஒருவர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் கிரீன்லாந்துவாசிகளின் பட்டியலைத் தொகுத்ததாக டிஆர் அறிக்கை கூறியது. கிரீன்லாந்தை டென்மார்க்கிலிருந்து பிரிக்கும் நோக்கில் “பிரிவினைவாத இயக்கத்தில்” சேர்க்கப்படக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதே இந்தப் பட்டியலின் நோக்கமாகும்.
அமெரிக்காவை விமர்சிக்கும் கிரீன்லாந்துவாசிகளின் எதிர்புப் பட்டியலையும் அவர்கள் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களில் டென்மார்க்கை எதிர்மறையாகக் காட்டக்கூடிய பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுமாறு அந்த நபர்களில் ஒருவர் உள்ளூர்வாசிகளைக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மற்ற இரண்டு அமெரிக்கர்களும் அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் சாதாரண குடிமக்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கிரீன்லாந்தை அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் டிரம்பின் இலக்கை ரகசியமாக முன்னேற்றுவதற்கு அந்தத் தொடர்புகள் பயன்படுத்தப்படலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
டென்மார்க்கிலிருந்து பிரிந்து செல்வதை நோக்கி கிரீன்லாந்திற்கு டிரம்புடன் தொடர்புடைய மூன்று அமெரிக்கர்கள் பயணம் செய்ததாக வெளியான செய்திகளிலிருந்து அமெரிக்க வெளியுறவுத்துறை தன்னை விலக்கிக் கொண்டது.
டென்மார்க்கிலிருந்து பிரிந்து செல்வதை நோக்கி கிரீன்லாந்திற்கு டிரம்புடன் தொடர்புடைய மூன்று அமெரிக்கர்கள் பயணம் செய்ததாக வெளியான செய்திகளிலிருந்து அமெரிக்க வெளியுறவுத்துறை தன்னை விலக்கிக் கொண்டது.
இந்த ஆண்டு இரண்டு முறை அமெரிக்க பொறுப்பதிகாரிக்கு டேனிஷ் வெளியுறவு அமைச்சர் சம்மன் அனுப்பியுள்ளார். மே மாதத்தில், அமெரிக்க உளவு நிறுவனங்கள் கிரீன்லாந்தில் அதிக கவனம் செலுத்துவதாக தகவல்கள் வந்ததை அடுத்து, ராஸ்முசென் ஸ்ட்ரோவை அழைத்தார்.
அமெரிக்காவிற்கு தற்போது கோபன்ஹேகனில் ஒரு தூதர் இல்லை. எனவே ராஸ்முசென், டென்மார்க்கில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரியும் மிக உயர்ந்த பதவியில் இருந்தவருமான ஸ்ட்ரோவை வரவழைத்தார்.
மே மாத வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியான ஒரு செய்தி, அமெரிக்க உளவு நிறுவனங்கள் கிரீன்லாந்தின் சுதந்திர இயக்கம் மற்றும் அதன் கனிம வளங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தது.
அந்த நேரத்தில், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட் அந்த அறிக்கையை மறுக்கவில்லை, ஆனால் WSJ “சட்டத்தை மீறி நமது நாட்டின் பாதுகாப்பையும் ஜனநாயகத்தையும் குறைத்து ம்திப்பிடுகின்றது” என்று குற்றம் சாட்டினார்.
டிரம்ப் அந்தத் தீவை வாங்க விரும்புவதாகக் கூறியதிலிருந்து கிரீன்லாந்து மீண்டும் மீண்டும் சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் எண்ணத்தையும் மறுக்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
கிரீன்லாந்தில் போதுமான அளவு முதலீடு செய்ய டென்மார்க் தவறிவிட்டதாக அமெரிக்க துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரல் மாதத்தில், டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், “நீங்கள் வேறொரு நாட்டை இணைக்க முடியாது” என்று கூறி புறந்தள்ளியிருந்தார்.
கிரீன்லாந்து 1979 முதல் பரந்த சுயாட்சியைக் கொண்டுள்ளது, ஆனால் டென்மார்க் இன்னும் அதன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையைக் கையாளுகிறது. இந்தத் தீவில் அமெரிக்க ‘பிட்டுஃபிக்’ விண்வெளித் தளம் உள்ளது, இது ஏவுகணை எச்சரிக்கை மற்றும் விண்வெளி கண்காணிப்பை வழங்குகிறது. இத்தீவு, அரிய-பூமி தாதுக்களால் நிறைந்துள்ளது மேலும் அகழ்ந்தெடுக்கப் படாத எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் செறிந்த இருப்புக்களைக் கொண்டுள்ளது, இருப்பினும், இத்தீவின் பூகோள பரம்பல் காரணமாக இக்கனிமவளங்களை அகழ்ந்தெடுத்தற் செயற்பாடு, வரலாற்று ரீதியாக மிகக் கடினமான செயற்பாடாக இருக்கின்றது.