புது தில்லி: பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு யாரைக் குறை கூறுவது என்பது இப்போது பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிஃப் அறிந்திருக்கிறார். நாட்டின் உள்கட்டமைப்பு அல்லது காலநிலை மாற்றம் அல்ல, வெள்ளத்திற்குக் காரணம் இந்தியாதான். புதன்கிழமை ஒரு அறிக்கையில், “இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் வெள்ள நீர் இறந்த உடல்களையும் சுமந்து வருகின்றது” என்று ஆசிஃப் கூறினார்.
அவரது சாடல், பாகிஸ்தானியர்களுக்கு வேடிக்கையாகி விட்டது. ஒரு பாகிஸ்தானிய பயனர், “அவர்கள் ரா முகவர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மற்றொருவர், “அவர் (ஆசிஃப்) வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுப்பது எது?” என்று கேட்டிருக்கின்றார்.
சியால்கோட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். வெள்ளத்தில் இறந்த உடல்கள், கால்நடைகள் மற்றும் குப்பைக் குவியல்கள் இருப்பது நகராட்சி அதிகாரிகளின் வடிகால் முயற்சிகளை மேலும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானின் செய்தி இணையதளமான ‘டயலொக் பாகிஸ்தான்,’ ஆறுகளில் மிதக்கும் உடல்கள் குறித்து கருத்து தெரிவித்த ஆசிஃப், எல்லையைத் தாண்டி சடலங்கள் அடித்துச் செல்வதை உள்ளூர் மக்கள் பார்த்ததாக கூறியிருக்கின்றார். ஜம்முவிலிருந்து பாயும் நீர்த்தடங்களில் சியால்கோட் அமைந்துள்ளது என்றும், அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் போதெல்லாம், நகரம் கடுமையான வெள்ளத்தை சந்திக்கிறது என்றும் ஆசிஃப் சுட்டிக்காட்டினார்.
மற்றவர்கள் அமைச்சரை கடுமையாக விமர்சித்தனர். “அரசியல் அபிலாஷைகளுக்காக, நமது சொந்த மக்களே வெள்ளப் பெருக்கு நிலைகளைச் சமாளிக்க அணைகளையும் கால்வாய்களையும் கட்டவிடாமல் தடுத்திருக்கின்றனர். கால்வாய்கள் கட்டுங்கள். அணைகள் கட்டுங்கள்!” என்று பேஸ்புக் பயனர் ஷாஜியா ஹுசைன் எழுதினார்.
இப்டிஷாம் சித்திக் என்ற இன்னொரு பயனர், இதுபோன்ற இன்னொரு கருத்தைப் பதிவிட்டிருக்கின்றார்: “தடுப்பணைகளைக் கட்டுங்கள், எதிரியைச் சாக்காக சொல்லாதீர்கள்.”
ஷாமீன் இஸ்லாம் என்ற கோபக்கார பாகிஸ்தானியர், வளர்ச்சித் திட்டங்களை அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார், மேலும் இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட கோபத்தில், “தற்போதைய தலைமைக்கு நீண்டகால தொலைநோக்கு பார்வை இல்லை. பாகிஸ்தானின் உண்மையான சவால்களைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அவர்கள் சைக்கிள் ஓட்டுவதற்குப் பாதைகளை பச்சை நிறமாக்குவது அல்லது இலவச வைஃபை வழங்குவது போன்ற மேலோட்டமான திட்டங்களில் மும்முரமாக இருக்கிறார்கள்” என்று எழுதினார்.
“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் அணைகள் மற்றும் நீர் மேலாண்மை போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்யும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில்தான் உண்மையான பணி உள்ளது. இருப்பினும், PMLN-ஐ குருட்டுத்தனமாக ஆதரிக்கும் மக்கள் இன்னும் உள்ளனர், பல தசாப்தங்களாக அர்த்தமுள்ள எதையும் மக்களுக்காக வழங்கத் தவறிய தலைவர்களுக்குப் பின்னால் ஆதரவாக இருக்கின்றார்கள் !!!!”
பாகிஸ்தானில் வெள்ளம்
கடந்த 15 ஆண்டுகளில், பாகிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் பாரதூரமான வெள்ளத்தை அநர்த்தங்களை சந்தித்திருக்கின்றது, ஏற்பட்ட ஒவ்வொரு அநர்த்தமும் முன்னைய அநர்த்தத்தைவிட பாரதூரமான பேரழிவை ஏற்படுத்தியிருக்கின்றன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ள அநர்த்தத்தால் சுமார் 2,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று பிபிசி அறிக்கை கூறுகிறது.
குஜராத், சியால்கோட் மற்றும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூர் போன்ற நகர்ப்புற மையங்களில் வெள்ள அபாயங்களைக் குறைப்பதில் மாகாண அதிகாரிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவையும் வழங்கும் என்று பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் உறுதியளித்தார்.
பாகிஸ்தானின் தலைமை வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, சியால்கோட்டில் கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை புதன்கிழமை 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதனால் தெருக்கள், கார்கள், வீடுகள் மற்றும் முழு கட்டிடங்களும் நீரில் மூழ்கியுள்ளன. பல குடியிருப்பாளர்கள் நீர்ப்பிரளயத்தில் சிக்கித் தவிக்கின்றனர் என்று மத்திய திட்டமிடல் அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இந்தியா தனது மேல்நிலை அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்ததற்குப் பின்னர், புதன்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக பேரிடர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் போது, அதிகப்படியான நீர் வெளியேற்றப்படும், இதனால் தாழ்நிலப் பிரதேசங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது – தற்போது பஞ்சாபின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அதிகாரிகள் விளக்கினர்.
இஸ்லாமாபாத்தில் உள்ள அதன் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுடன் இந்தியா வெள்ளத் தரவுகளைப் பகிர்ந்து கொண்டது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) ஒருதலைப்பட்சமாக நிறுத்தி வைத்த பிறகு, பாகிஸ்தானுக்கு வெள்ளத் தரவுகளை இந்தியா வழங்கிய முதல் நிகழ்வு இதுவாகும்.
இந்திய எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (PDMA) வெள்ள எச்சரிக்கையை வெளியிட்டது, ‘தாவி’ ஆற்றில் நீர் அதிகரிப்பு குஜராத் மற்றும் சியால்கோட்டில் ‘செனாப் நதி’ வழியாக நீர் மட்டங்களை பாதிக்கக்கூடும் என்று எச்சரித்தது. வெள்ள கண்காணிப்பு அமைப்புகளை செயல்படுத்தவும், முன்கூட்டியே எச்சரிக்கை வழிமுறைகளை வலுப்படுத்தவும், ஒருங்கிணைந்த அவசரகால செயற்பாடுகளை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றுவதற்கு முன்பு இந்தியா இரண்டு முறை பாகிஸ்தானுக்குத் தகவல் தெரிவித்திருந்ததையும் ஆசிப் ஒப்புக்கொண்டார்.
ஐ.நா. அறிக்கையின்படி, ஜூன் மாத இறுதியில் இருந்து, பாகிஸ்தானின் வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 800 பேர் இறந்துள்ளனர், இது கடந்த ஆண்டு ஏற்பட்ட உயிரிழப்புடன் ஒப்பிடும் போது, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். கைபர் பக்துன்க்வா மாநிலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் வீடுகளையும் பள்ளிகளையும் அழித்துள்ளன, அதே நேரத்தில் பஞ்சாப் சட்லெஜ், ரவி மற்றும் செனாப் நதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. கில்கிட்-பால்டிஸ்தானில், பனிப்பாறை ஏரி வெடிப்புகள் வீடுகள், மின் இணைப்புகள் மற்றும் நீர் அமைப்புகளை அழித்துவிட்டன, மேலும் காலநிலை மாற்றம் இத்தகைய பேரழிவுகளை துரிதப்படுத்துகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.