புது தில்லி: ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெற்ற தனது பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அங்கு நடத்தப்பட்ட ‘சுத்திகரிப்பு’ சடங்கில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யுமாறு வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
செப்டம்பர் 2-ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில், இச்சம்பவம் குறித்து விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையில் நட்டா அளித்த வாக்குறுதியை கார்கே நினைவுபடுத்தினார். சம்பவம் நடந்து 24 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“ஹல்த்வானியில் இந்த இழிவான செயலைச் செய்த சம்பந்தப்பட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது, சம்பவம் நடந்து 24 நாட்கள் ஆகியும் இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படாதது எனக்கு ஆச்சரியமளிக்கிறது,” என்று அவர் எழுதினார்.
கூட்ட அரங்கில் நடந்த நிகழ்வை, சமத்துவம் மற்றும் கண்ணியம் சார்ந்த அரசியலமைப்பு விழுமியங்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்று கார்கே கூறினார். “நான் உரையாற்றிய ராம்லீலா மைதானத்தில், இந்திய அரசியலமைப்பின் உணர்வுக்கும் மனித விழுமியங்களுக்கும் முரணான வகையில் சுத்திகரிப்புச் சடங்கு நடத்தப்பட்டது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மகத் சத்தியாகிரகத்தின் போது பி.ஆர். அம்பேத்கர் எதிர்கொண்ட அனுபவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மகத் குளத்தில் அம்பேத்கர் தண்ணீர் குடித்த பிறகு, அவரை எதிர்த்தவர்கள் மந்திரங்களை ஓதி, கோமியம் மற்றும் சாணத்தைப் பயன்படுத்தி சுத்திகரிப்புச் சடங்கை நடத்தியதை கார்கே குறிப்பிட்டார். “மந்திரங்களை ஓதுவதாலோ அல்லது யாகம் (ஹவன்) செய்வதாலோ மட்டும், சாதிய அடிப்படையிலான அந்தச் சுத்திகரிப்புச் செயல் புனிதமானதாகிவிடாது,” என்று கார்கே எழுதினார்.
இச்சம்பவத்தை தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக மட்டும் பார்க்கவில்லை என்பதை கார்கே தெளிவுபடுத்தினார். “இப்பிரச்சினை என்னை தனிப்பட்ட முறையிலோ அல்லது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் என்ற பதவியிலோ மட்டும் முடிந்துவிடுவதல்ல; இது ஒவ்வொரு நாளும் இத்தகைய கொடூரமான யதார்த்தத்தை எதிர்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது,” என்று அவர் கூறினார்.
சமூகத்தின் ஒரு பிரிவினரைத் தொடர்ந்து பாதிக்கும் மனநிலையை இது பிரதிபலிப்பதாலும், அரசின் கவனம் தேவைப்படுவதாலும் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை எழுப்பப்பட்டதாக அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறும், அச்சடங்கில் ஈடுபட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு உத்தரகண்ட் முதல்வருக்கு அறிவுறுத்துமாறும் கார்கே நட்டாவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆகஸ்ட் 8 அன்று ஹல்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கார்கே காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை தொடங்கியது. அதன்பின்னர், அந்த இடத்தில் ஒரு சுத்திகரிப்புச் சடங்கு நடைபெற்றது. பின்னர், ஆகஸ்ட் 13 அன்று மாநிலங்களவையில் கார்கே இந்த விவகாரத்தை எழுப்பினார்.
இச்சம்பவம் “துரதிர்ஷ்டவசமானது” என்று குறிப்பிட்ட நட்டா, பாரதிய ஜனதா கட்சி இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்று கூறியதுடன், இவ்விவகாரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கார்கேவிடம் உறுதியளித்தார். இருப்பினும், சில நாட்களிலேயே உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் அந்த ‘சுத்திகரிப்பு’ (shuddhikaran) நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, சாதியப் பாகுபாட்டை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த அந்தச் சடங்கிற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதிய உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் அவரது கருத்துகளுக்காக, அந்த காங்கிரஸ் தலைவர் மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ராகுல் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கிற்கு எதிராக காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தியது.
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் கார்கே இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும், தனக்காகக் குரல் கொடுக்காத தனது சக கட்சித் தலைவர்கள் மீது அதிருப்தி தெரிவித்ததாகவும் ‘திபிரிண்ட்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
