புது தில்லி: பெரிய கப்பல்களிலிருந்து பெருமளவிலான எண்ணெய் கடலில் கசியும் விபத்துகளின்போது மட்டுமே கடல்சார் எண்ணெய் மாசுபாடு குறித்த விவாதங்கள் எழுகின்றன. ஆனால், இத்தகைய தனிப்பட்ட நிகழ்வுகளை விடவும் இந்த மாசுபாடு மிகவும் பரவலானதாகவும், நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாகவும் உள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ‘ஸ்கைட்ரூத்’ வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
2023 முதல் 2025 வரையிலான செயற்கைக்கோள் தரவுகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.58 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான கடல் மேற்பரப்பு எண்ணெய் படலங்களால் (oil slicks) சூழப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 48 சதவீதத்திற்குச் சமமானதும், பிரான்ஸ் நாட்டின் பரப்பளவைப் போல மூன்று மடங்கு பெரியதும் ஆகும். 2023 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 22,805 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உள்ளடக்கிய 3,152 எண்ணெய் படலங்களை ஸ்கைட்ரூத் அமைப்பு நேரடியாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகமையின் ‘சென்டினல்-1 சிந்தெடிக் அப்பர்ச்சர் ரேடார்’ (Sentinel-1 SAR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெரும்பாலான எண்ணெய் படலங்கள் கடற்கரைக்கு அருகிலேயே காணப்படுவது கண்டறியப்பட்டது; கப்பல் போக்குவரத்து பெரும்பாலும் கடற்கரையோரப் பகுதிகளிலேயே குவிந்திருப்பதே இதற்குக் முக்கிய காரணமாகும். வழக்கமான செயற்கைக்கோள் கேமராக்களைப் போலன்றி, இந்த ரேடார் தொழில்நுட்பத்தால் இரவு நேரங்களிலும் மேகமூட்டமான நாட்களிலும் கூட கடற்பகுதிகளைக் கண்காணிக்க முடியும்.
உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகள் (832 எண்ணெய் படலங்கள்), மலேசியா மற்றும் ருமேனியா கடற்கரைப் பகுதிகள் (தலா 200-க்கும் மேற்பட்டவை), மற்றும் நைஜீரியா மற்றும் பல்கேரியா (தலா 150-க்கும் மேற்பட்டவை) ஆகியவை அடங்கும்.
தொடர்ச்சியான மாசுபாடு
ஓமன் கடற்கரைக்கு அப்பால் சுமார் 8,00,000 பீப்பாய் எண்ணெயை ஏற்றிச் சென்ற ‘கரோலின் பெசெங்கி’ (Caroline Bezengi) என்ற கப்பல் தாக்கப்பட்ட நிகழ்வு போன்ற நேரங்களில் மட்டுமே ஊடகங்கள் பெரும்பாலும் எண்ணெய் கசிவு குறித்து கவனம் செலுத்துகின்றன; அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட கசிவு 200 கி.மீ தூரத்திற்கு ஓமன் நிலப்பகுதியை நோக்கிப் பரவியது.
எண்ணெய் கசிவு என்பது திரவ பெட்ரோலியம் அல்லது கச்சா எண்ணெய் நேரடியாகச் சுற்றுச்சூழலில் கலப்பதைக் குறிக்கிறது. ஆனால், ‘ஸ்கைட்ரூத்’ (SkyTruth) அறிக்கை வேறு வகையான எண்ணெய் மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது: அதாவது கப்பல்கள் அல்லது கடலில் அமைந்துள்ள தொழில் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் எண்ணெய் கலந்த கழிவுநீர் மற்றும் அது போன்ற பிற மாசுபாடுகள்.
இந்த எண்ணெய் மாசுபாட்டில் சுமார் 80 சதவீதம் கப்பல்களுடன் தொடர்புடையது என்றும், மீதமுள்ளவை கடலில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகளால் ஏற்பட்டவை என்றும் ஸ்கைட்ரூத் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் கூட இதிலிருந்து தப்புவதில்லை; ஏனெனில் கடல்கள் எப்போதும் அலைகளால் இயங்கிக்கொண்டிருப்பதால், கப்பல்களிலிருந்து வெளியேறும் எண்ணெய் படலங்கள் வெகுதூரம் அடித்துச் செல்லப்படுகின்றன. இருப்பினும், கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், அவற்றைச் சுற்றியுள்ள நீர்ப்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் படலங்களின் செறிவு குறைவாகவே இருந்தது.
கருங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் மெக்சிகோ வளைகுடா ஆகிய பகுதிகளில் எண்ணெய் படலங்களின் செறிவு மிக அதிகமாக இருப்பது ஒரு கவலைக்குரிய கண்டுபிடிப்பாகும். இது அப்பகுதிகளில் வாழும் போர்போயிஸ் (porpoises) மற்றும் டால்பின்கள் போன்ற உயிரினங்களையும், அழிவின் விளிம்பில் உள்ள ‘ரைஸ் திமிங்கிலங்களையும்’ (Rice whales) இத்தகைய தொடர்ச்சியான மாசுபாட்டிற்கு ஆளாக்குகிறது. இது கடல்வாழ் உயிரினங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, காலப்போக்கில் அவற்றின் நடத்தை முறைகள் மற்றும் வாழ்விடத்தின் தரத்தையும் பாதிக்கும் என்று கடல் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை பூமியின் பெருங்கடல்களில் கண்காணிக்கப்பட்ட பகுதிகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், எந்தவொரு நாட்டின் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பிலும் சேராத ‘நடுக் கடல்’ (high seas) பகுதிகள் மிகக் குறைவாகவே கண்காணிக்கப்படுகின்றன. மேலும், மாசுபாட்டை ஏற்படுத்தும் கப்பல்களின் உரிமையாளர்கள் குறித்த போதுமான தகவல்களும் இல்லை. எனவே, இத்தகைய கடல் மாசுபாட்டை முதலில் கண்டறிந்து, பின்னர் கப்பல் இயக்குபவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வதன் முக்கியத்துவத்தை ஸ்கைட்ரூத் வலியுறுத்துகிறது.
